ரணில் மீண்டும் பிரதமரானார்

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே உரையாற்றும் ரணில் விக்ரமசிங்க.
இலங்கையில் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்கள் இடையே உரையாற்றும் ரணில் விக்ரமசிங்க.

இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் மைத்ரிபால சிறீசேனா, அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையில், 51 நாள்களாக நீடித்து வந்த அரசியல் குழப்பம், தற்போது ரணில் மீண்டும் பதவியேற்றிருப்பதன் மூலமாக முடிவுக்கு வந்துள்ளது.
புதிய அரசின் அமைச்சரவை திங்கள்கிழமை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. அதில், அதிபரின் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் உள்பட 30 எம்.பி.க்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க (59) இலங்கைப் பிரதமராக பதவியேற்றிருப்பது 5-ஆவது முறையாகும். இதையொட்டி அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
பதவியேற்புக்கு பின் ரணில் பேசுகையில், ""இது எனக்கான வெற்றியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சிக்கான வெற்றியோ அல்ல. இது இலங்கையின் ஜனநாயகமிக்க அரசமைப்புகளுக்கும், குடிமக்களின் இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றியாகும். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கவும், ஜனநாயகத்தை வெற்றி பெறச் செய்யவும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.
ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என திட்டவட்டமாகக் கூறி வந்த அதிபர் சிறீசேனா, ஞாயிற்றுக்கிழமை அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, நியமன ஆணையை வழங்கியபோது புன்னகைத்தபடி இருந்தார்.
இணைந்து பணியாற்ற தயார்: 
அதிபர் சிறீசேனாவை சில குழுவினர் தவறாக வழிநடத்திவிட்டதாகவும், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, அதிபர் சிறீசேனா அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்திருப்பதில் வியப்பேதும் இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ""அரசின் ஒற்றுமையை விரும்பாத சில குழுவினர், அதிபரை தவறாக வழிநடத்திவிட்டனர். இதனால்தான், அவர் ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டியதாயிற்று. ஆனால், தற்போது உண்மை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. 
அதிபரின் உண்மையான குணத்தை இது வெளிப்படுத்தியிருக்கிறது. அரசு நிர்வாகத்தில் அவருடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருக்கிறது.  கடந்த கால நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்ளப்பட்ட பாடங்களை, ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலப்படுத்தவும், நீதி, நேர்மையை ஊக்கப்படுத்தவும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்றார்.
வழிவிட்ட ராஜபட்ச: ரணில் விக்ரமசிங்கவை கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவை நியமித்தார் சிறீசேனா. 
பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட ராஜபட்ச, பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவை திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 
இதையடுத்து, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தலை ஜனவரி 5-ஆம் தேதியில் நடத்துவதற்கான அறிவிப்பை அதிபர் சிறீசேனா வெளியிட்டார். இதற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சில இயக்கங்களின் சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில், நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் கூடியபோது, இருவேறு சமயங்களில் ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அவர் பதவி விலகவில்லை. அதிபரும் அவரை பதவி நீக்கம் செய்ய மறுத்தார்.
இத்தகைய சூழலில், ராஜபட்ச பிரதமராக செயல்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட போதிலும், கீழ் நீதிமன்றத்தின் தடையுத்தரவை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டது.
இதற்கிடையே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை தீர்ப்பளித்தபோது, அதிபரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என அறிவித்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அதிபர் சிறீசேனாவுக்கு பாதகமாக அமைந்த நிலையில், பிரதமர் பதவியை ராஜபட்ச சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். இதைத்தொடர்ந்து ரணில் மீண்டும் பிரதமராகியுள்ளார்.

ஜனநாயகத்தை காக்கவே ரணில் நியமனம்


""ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கும் முடிவு நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்டது. அதே வேளையில், ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற பாரம்பரியங்களை காக்கும் நோக்கில்தான் அவர் மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என்று அதிபர் சிறீசேனா விளக்கம் அளித்துள்ளார்.
எக்காரணத்தைக் கொண்டும் ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது என ஏற்கெனவே கூறியிருந்த நிலையில், அந்த முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதிய பிரதமருக்கான பதவிப்பிரமாண நிகழ்ச்சி முடிந்த பின்னர், ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சிறீசேனா உரையாற்றினார்.
அப்போது, ""மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகளை ஆலோசித்த பின்னரே ஒவ்வொரு செயலையும் நான் மேற்கொண்டேன். நல்லெண்ண அடிப்படையில் நான் செயல்பட்டிருக்கிறேன். அதற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுவேன்.
சுமார் ஒன்றரை கோடி மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டேன். 
ஆனால், 122 எம்.பி.க்கள் அதைத் தடுத்துவிட்டனர். இந்தச் சூழலில், நாடாளுமன்ற பாரம்பரியம், ஜனநாயகம் ஆகியவற்றை காக்க வேண்டும் என்ற நோக்கில் ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளேன்'' என்றார் அவர்.


இந்தியா வரவேற்பு

புது தில்லி, டிச.16: இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார்கூறியதாவது:
அண்டை நாடு மற்றும் உண்மையான நட்பு நாடு என்ற வகையில், இலங்கையில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு தீர்வு காணப்பட்டிருப்பதை இந்தியா வரவேற்கிறது. அனைத்து அரசியல் சக்திகள் வெளிப்படுத்திய முதிர்ச்சி மற்றும் ஜனநாயகத்தின் வலிமை ஆகியவற்றுக்கான வெற்றிதான் இது. இந்தியா - இலங்கை இடையிலான நட்புறவு மேல்நோக்கி பயணிக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com