சுடச்சுட

  

  இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நியமனம்  

  By DIN  |   Published on : 18th December 2018 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajabakshe

   

  கொழும்பு: இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவை நியமனம் செய்து அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். 

  ரணிலை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ராஜபட்சவை நியமித்த அதிபர் சிறீசேனாவின் முடிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ரணிலும் தான் பிரதமராகவே நீடிப்பதாக அறிவித்தார். நாடாளுமன்றத் தலைவர் கரு ஜெயசூர்யாவும் அரசியலமைப்புச் சட்டப்படி ரணிலே பிரதமர் என்று அறிவித்தார். 

  இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்ட சிறீசேனா, நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். சிறீசேனாவின் இந்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்த நிலையில், கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தைக் கூட்டினார். அங்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சிறீசேனா-ராஜபட்ச கூட்டணி தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வந்தது. 

  மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியை சனிக்கிழமை ராஜிநாமா செய்தார். அதிபர் சிறீசேனா-ராஜபட்ச கூட்டணிக்கு எதிராக இலங்கை உச்ச நீதிமன்றம் அளித்த இரண்டு அதிரடித் தீர்ப்புகளையடுத்து ராஜபட்ச இந்த முடிவை எடுத்துள்ளார். 

  இந்நிலையில், இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (டிச.16) பதவியேற்றார். ரணிலுக்கு அதிபர் சிறீசேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

  30 பேரைக் கொண்ட புதிய அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சரவையில் அதிபர் சிறீசேனாவின் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் இடம்பெற இருப்பதாகவும் தெரிகிறது.

  இந்நிலையில் இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவை நியமனம் செய்து அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். 
   
  தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொடரின்  போது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதை அறிவித்தார்.

  ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபட்ச எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai