தலிபான்களுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைதிப்
தலிபான்களுடன் அமெரிக்கா நேரடிப் பேச்சுவார்த்தை


ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தொடங்கியது.
பாகிஸ்தானின் முயற்சியில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஃபைசல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து அந்த நாட்டு தலிபான் அமைப்பினருக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை, ஐக்கிய அரபு அமீரகத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.
ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அந்தப் பேச்சுவார்த்தை உதவும் என்று நம்புகிறோம்.
அந்த நாட்டில் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதிலும், மறுசீரமைப்பை ஏற்படுத்துவதிலும் சம்பந்தப்பட்ட பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறியிருந்தனர்.
இந்தப் பேச்சுவார்த்தையில சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தூதரக வட்டாரங்கள் கூறியதாவது:
தலிபான்களுக்கும், தங்களுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாதத் தொடக்கத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட பாகிஸ்தான், இந்தப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் மூலம், ஆப்கன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முன்னற்றம் ஏற்பட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகிஸ்தானின் முயற்சியில் அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே நேரடியாக நடைபெறும் இரண்டாவது அமைதிப் பேச்சுவார்த்தை இது.
ஏற்கெனவே, பாகிஸ்தான் முன்னிலையில் அமெரிக்கா - தலிபான்கள் இடையே பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே கடந்த 2015-ஆம் ஆண்டு நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
முன்னதாக, அமெரிக்காவிடமிருந்து கோடிக்கணக்கான டாலர்களை ராணுவ உதவியாக பெற்றாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக அந்த நாடு எதுவுமே செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு தற்போது பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அமைதியை ஏற்படுத்த, அந்த நாட்டு அரசுடன்தான் தலிபான் பயங்கரவாதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறி வந்தது.
எனினும், ஆப்கன் அரசு என்பது அமெரிக்காவின் கைப்பாவை எனவும், எனவே அமெரிக்காவுடன்தான் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவோம் என தலிபான்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், தலிபான்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்கா கடந்த ஜூலை மாதம் அறிவித்தது.
அதன் மூலம், கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வரும் ஆப்கன் போரில், தலிபான் பயங்கரவாதிகளுடனான பேச்சுவர்த்தை விவகாரத்தில் அமெரிக்கா தனது நிலைப்பாட்டை முதல் முறையாக மாற்றிக் கொண்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com