மேலாதிக்கத்தை நிலைநாட்ட சீனா ஒருபோதும் விரும்பியதில்லை: அதிபர் ஷி ஜின்பிங்

சீனா தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒருபோதும் விரும்பியதில்லை என அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங்
சீன சந்தை சீர்திருத்தத்தின் 40-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ஷி ஜின்பிங்
சீன சந்தை சீர்திருத்தத்தின் 40-ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ஷி ஜின்பிங்


சீனா தன்னுடைய மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஒருபோதும் விரும்பியதில்லை என அந்நாட்டின் அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் சீனா ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில் சீனா இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
சீனாவில் சந்தை சீர்திருத்தம் மேற்கொண்டு 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்ட விழாவில் கலந்து கொண்ட அதிபர் ஷி ஜின்பிங் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
பன்முக வர்த்தக அமைப்பு முறைக்கு மாறுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது. இதற்காக, அதன் பொருளாதாரத்தை உலக நாடுகளுக்கு மேலும் திறந்துவிடுவதற்கு தயாராகியுள்ளது. இதர நாடுகளின் நலன்களை அழித்து முன்னேற்றம் அடைய சீனா ஒருபோதும் விரும்பியதில்லை.
உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் ஆசிய-பசிபிக் பிராந்தியம் முதல் ஆப்பிரிக்கா வரை உலகம் முழுவதும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதனை சில நாடுகள் தவறாக புரிந்து கொண்டு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவை அரசியல் நோக்கங்களுக்காக அவ்வாறு விமர்சனம் செய்யலாம்.
சீனாவின் முன்னேற்றமானது எந்த நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையாது. மேலும், தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட சீனா ஒருபோதும் விரும்பியதில்லை.
சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து மறுமலர்ச்சி நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். அதற்கு ஏற்றவாறு பொருளாதாரத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும்.
சீன மக்கள் எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பது குறித்து கட்டைளையிட யாருக்கும் அதிகாரமில்லை. அந்த நிலையில் யாரும் இல்லை என்றார் அவர்.
சீன பொருளாதார சீரமைப்பு திட்டங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்த 100 பேர் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டு யுயு உள்ளிட்ட பலருக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் கலந்து கொண்ட சீன அதிபர் ஷி ஜின்பிங் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினாலும், அமெரிக்காவுடன் ஏற்பட்ட வர்த்தகப் போர் பதற்றம் மற்றும் அதனால் ஏற்பட்ட பொருளாதார சுணக்க நிலையிலிருந்து மீளுவதற்கான புதிய திட்டங்கள் குறித்து கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்க-சீன மோதல் பின்னணி: சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களின் மதிப்பைவிட, அந்த நாட்டிடமிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருள்களின் மதிப்பு அதிகமாக இருப்பதாக கூறி, இரு நாடுகளுக்கும் இடையே நியாயமற்ற அளவில் வர்த்தகப் பற்றாக்குறை நிலவுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். 
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்ற தொழில்நுட்பங்களைத் திருடி சீனா பயன்படுத்தி வருவதால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் அவர் புகார் கூறினார். 
இதன் காரணமாக, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் உத்தரவை டிரம்ப் பிறப்பித்தார். அதற்குப் பதிலடியாக, அமெரிக்க பொருள்களின் இறக்குமதிக்கும் சீனா கூடுதல் வரிகளை விதித்தது. 
உலகின் மிகப் பெரிய பொருளாதார சக்திகளான அந்த இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட வர்த்தகப் போர் உலக நாடுகளின் சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டினிடையே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, சீனப் பொருள்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்கப் பொருள்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிப்பதை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
மேலும், வரும் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 20,000 கோடி டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டது.
அமெரிக்காவிடமிருந்து வேளாண்மை, தொழிற்துறை மற்றும் எரிசக்திப் பொருள்களை கணிசமான அளவில் இறக்குமதி செய்ய சீனாவும் ஒப்புக் கொண்டது. இவைதவிர, அமெரிக்க கார் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்வதாகவும் சீனா அறிவித்தது. 
இந்தச் சூழ்நிலையில், அமெரிக்காவுடனான மோதல் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் சீன அதிபர் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் கலந்து கொண்டு பதக்கங்களைப் பெற்ற அலிபாபா இணை நிறுவனர் ஜாக் மா (நடுவில்) உள்ளிட்டோர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com