Enable Javscript for better performance
தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கும் சூழலில் வட கொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு- Dinamani

சுடச்சுட

    

    தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடங்கும் சூழலில் வட கொரியா பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    skorea

    ராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற ஏவுகணைகள்.

    தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக, அண்டை நாடான வட கொரியா மாபெரும் ராணுவ அணிவகுப்பை நடத்தியது.
    தங்கள் நாட்டு ராணுவம் தொடங்கப்பட்ட 70-ஆவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் வட கொரியா நடத்திய அந்த அணிவகுப்பில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்களை அந்த நாடு காட்சிப்படுத்தியது.
    சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்நாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதன் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
    இதனால் கொரிய தீபகற்பத்தில் கடும் போர்ப் பதற்றம் நிலவி வந்தது.
    இந்த நிலையில், தென் கொரியாவில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தங்கள் நாட்டு வீரர்களை அனுப்புவது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவித்தார்.
    இதையடுத்து, போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்க-தென் கொரிய வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சி தள்ளிவைக்கப்பட்டது.
    மேலும், கடந்த டிசம்பர் 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இரு நாடுகளுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. 
    அந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வட - தென் கொரியா நாடுகள் இடையே பிணக்கம் குறைந்த சூழலில், தனது நாட்டு விளையாட்டு வீரர்களை தென் கொரியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் செய்ய வட கொரியா ஒப்புக் கொண்டது.
    மேலும், அந்தப் போட்டியின் துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னின் தங்கை கிம் ஜோ-ஜோங் தென் கொரியா வருகிறார்.
    வட கொரிய ஆட்சியாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தென் கொரியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
    இத்தகைய சூழலில், வட கொரியா நடத்திய பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு முக்கியத்துவம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai