ஜப்பான் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்வு
By ANI | Published on : 11th July 2018 04:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜப்பான் அமைச்சரவை செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியதாவது:
கன மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 176-ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, 9 பேரைக் காணவில்லை. இனிவரும் நாட்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் இதன் காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படலாம். இதனால் மீட்பு நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்றார்.
முன்னதாக, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளில் 75,000 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் சுமார் 17 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்சாரம், தொலைபேசி உள்ளிட்ட சேவைகள் முடங்கியுள்ளன. இதுவரை 2 மில்லியன் மக்களை இடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் 2.3 மில்லியன் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.