இனி அனைவரும் நிம்மதியாக உறங்கலாம்: அமெரிக்கா திரும்பிய டிரம்ப் ட்வீட்

மிகப்பெரிய பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது தான் நாடு திரும்பியுள்ளேன். அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.
இனி அனைவரும் நிம்மதியாக உறங்கலாம்: அமெரிக்கா திரும்பிய டிரம்ப் ட்வீட்

கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியையும் வளர்ச்சியையும் ஏற்படுத்த, சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பின்போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரின் சென்ஸாட்டா தீவிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் டிரம்ப்பும், கிம் ஜோங்கும் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இரு நாடுகளையும் சேர்ந்த அதிபர்கள் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேச்சுவார்த்தையில், தனது அணு ஆயுதங்களைக் கைவிட வட கொரியாவும், அதற்குப் பதிலாக வட கொரியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டன.

இந்நிலையில், நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ட்விட்டரில் புதன்கிழமை பதிவிட்டதாவது:

மிகப்பெரிய பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது தான் நாடு திரும்பியுள்ளேன். நான் அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல் தற்போது அனைவரும் பாதுகாப்பாக உணரும் தருணம் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவிடம் இருந்து இனிவரும் காலங்களில் எந்தவித அணுஆயுத அச்சுறுத்தலும் இருக்காது. 

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு சுவாரஸ்யமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்துள்ளது. வருங்காலத்தில் வடகொரியாவுக்கென சர்வதேச அளிவல் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

இந்த சந்திப்புக்கு முன்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா போருக்கு தயாராவதாக பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். முன்னாள் அதிபர் ஒபாமா கூட வடகொரியா தான் அமெரிக்காவின் முக்கிய மற்றும் மிகப்பெரிய எதிரி என்று குறிப்பிட்டுள்ளார். இனிமேல் அதுபோன்ற சூழ்நிலை கிடையாது. அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com