வர்த்தகப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண விரைவில் பேச்சுவார்த்தை: இந்தியா, அமெரிக்கா முடிவு

இந்தியா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, உயரதிகாரிகள் அளவில் விரிவான பேச்சுவார்த்தை

இந்தியா, அமெரிக்கா இடையே நிலவும் வர்த்தகம் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக, உயரதிகாரிகள் அளவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. 
மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவின் அமெரிக்க பயணத்தின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, கனடனாவில் உள்ள கியூபெக் நகருக்குச் சென்றிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, இந்தியா உள்ளிட்ட பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள சில நாடுகள், சில அமெரிக்க தயாரிப்புகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாகக் குற்றம் சாட்டினார். இதுபோன்று அமெரிக்காவை கொள்ளையடிக்கும் நாடுகளுடனான வர்த்தக உறவுகள் முறித்துக் கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
இதேபோல், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகியவற்றுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக, அமெரிக்கா வந்த மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, வாஷிங்டனில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில் துறை தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். அந்தக் கூட்டத்தை அமெரிக்க-இந்திய வர்த்தகக் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து, அமெரிக்க தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் வில்பர் ரோஸ், வர்த்தகக் கவுன்சில் பிரதிநிதி ராபர்ட் லிக்திஸர் ஆகியோரை சுரேஷ் பிரபு சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா, அமெரிக்கா இடையே வரி விதிப்பில் சிக்கல் இருப்பதை இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதாரத் துறையில் நிலவும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கு இரு நாட்டு உயரதிகாரிகள் அளவில் விரிவான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
தனது அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை தாயகம் திரும்பும்போது இந்தியப் பத்திரிகையாளர்களுக்கு சுரேஷ் பிரபு பேட்டியளித்தார். அப்போது, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்தியாவில் இருந்து உயரதிகாரிகள் குழு அடுத்த சில தினங்களில் அமெரிக்கா வரும் என்றார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவை விரிவுபடுத்துவதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com