Enable Javscript for better performance
கிழக்கு கெளட்டாவிலிருந்து கிளர்ச்சி படையினர் பாதுகாப்பாக வெளியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    கிழக்கு கெளட்டாவிலிருந்து கிளர்ச்சி படையினர் பாதுகாப்பாக வெளியேற்றம்  

    By  ஹராஸ்தா,  |   Published on : 24th March 2018 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    SYR

    சிரியா அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பத்தின்படி, கடும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு வந்த கிழக்கு கெளட்டா பகுதியிலிருந்து கிளர்ச்சியாளர்கள் முதல்கட்டமாக வெள்ளிக்கிழமை பாதுகாப்பாக வெளியேறினர்.
     ரஷியாவின் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கிழக்கு கெளட்டாவில் கிளர்ச்சியாளர்கள் வெளியேறும் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
     கிளர்ச்சிப் படையினர் தங்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு வழி வகை செய்ய சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் ரஷியா முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
     அதனைத் தொடர்ந்து, தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியிலிருந்து கிளர்ச்சிப் படையினர் பாதுகாப்பு வழித்தடம் வழியாக வெளியேறினர். அவர்கள், வட மேற்கே இருக்கும் இத்லிப் மாகாணத்துக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி வழியாக செல்வதற்கான அனுமதிக்காக பல மணி நேரம் அவர்கள் காத்திருந்தனர்.
     413 கிளர்ச்சிப் படையினர் உள்பட 1,580 பேர் கிழக்கு கெளட்டாவிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
     இதற்கிடையே, சிரியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரே மாகாணமான இத்லிப்பில், சந்தைப் பகுதியில் நிகழ்த்தப்பட்ட விமானத் தாக்குதலில் 28 பொதுமக்கள் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.
     சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்த கடந்த 2012-ஆம் ஆண்டில், கிழக்கு கெளட்டா பகுதியை மதவாத மற்றும் கிளர்ச்சிக் குழுக்களிடம் அரசுப் படைகள் இழந்தன. அதிலிருந்து இந்தப் பகுதி முற்றுகையிடப்பட்டிருந்தாலும், தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. எனினும், கடந்த ஓராண்டாக மேற்கொண்ட கடும் முயற்சிக்குப் பிறகு கிழக்கு கெளட்டாவில் இழந்த மூன்றில் இரண்டு பங்கு நிலப்பரப்பை ராணுவம் மீட்டது.
     இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடம் எஞ்சியுள்ள பகுதியை மீட்கும் முயற்சியாக, சுமார் 4 லட்சம் பொதுமக்கள் வசிக்கும் அந்தப் பகுதியில் கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் அரசுப் படைகள் தீவிர வான்வழித் தாக்குதல்களையும், எல்லைக்கு அப்பாலிருந்து எறிகணைத் தாக்குதல்களையும் நிகழ்த்தின.
     இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் பலியானதைத் தொடர்ந்து, தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வழங்குதல், பதற்றப் பகுதிகளிலிருந்து அவர்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுதல் ஆகிய நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, கிழக்கு கெளட்டாவில் 30 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியது.
     இந்தச் சூழலில், கிளர்ச்சிப் படையினரும் வெளியேறத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai