Enable Javscript for better performance
டிரம்ப்பின் அடுத்த அதிரடி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    டிரம்ப்பின் அடுத்த அதிரடி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நீக்கம்

    By  வாஷிங்டன்,  |   Published on : 24th March 2018 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    MC

    அமெரிக்காவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து ஹெச்.ஆர். மெக்மாஸ்டரை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.
     அவருக்குப் பதிலாக, ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஜான் போல்ட்டன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
     சர்வதேச விவகாரங்களில் தனது கொள்கைக்கு எதிரான கருத்து கொண்டவர்களை முக்கியப் பதவியிலிருந்து வெளியேற்றும் டிரம்ப்பின் அதிரடி முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.
     டிரம்ப்புக்கும், மெக்மாஸ்டருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை மெக்மாஸ்டர் ராஜிநாமா செய்துவிட்டதாக கடந்த வாரமே தகவல்கள் வெளியாகின. எனினும், இந்தத் தகவலை மறுத்ததுடன், தேசியப் பாதுகாப்பு கவுன்சிலில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று அதிபர் மாளிகை திட்டவட்டமாக மறுத்திருந்தது.
     இந்தச் சூழலில், அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை) வெளியிட்ட சுட்டுரை (டுவிட்டர்) பதிவில் தெரிவித்துள்ளதாவது:
     எனது புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஜான் போல்ட்டனை நியமிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். வரும் ஏப்ரல் மாதம் 4-ஆம் தேதி அவர் அந்தப் பொறுப்பை ஏற்கிறார்.
     தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர் ஆற்றிய மிகச் சிறந்த சேவைகளுக்காக அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதவியிலிருந்து விலகினாலும், அவர் எனது நண்பராக எப்போதும் தொடருவார் என்று தனது சுட்டுரைப் பதிவுகளில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
     இந்த சுட்டுரைப் பதிவுகள் வெளியான நிலையில், மெக்மாஸ்டர் தனது பதவி விலகல் கடிதத்தை வியாழக்கிழமை சமர்ப்பித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
     தற்போது பதவி விலகும் மெக்மாஸ்டர், டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு அவரால் நியமிக்கப்பட்ட இரண்டாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.
     அதிபர் தேர்தலின்போது டிரம்ப்புக்கு ஆதரவாக ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்து துணை அதிபர் மைக் பென்ஸýக்கு தவறான தகவல்களை அளித்த புகாரின்பேரில், தனது முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளைனை டிரம்ப் அதிரடியாக நீக்கினார்.
     இந்த நிலையில், மெக்மாஸ்டரையும் நீக்கிவிட்டு தற்போது மூன்றாவது முறையாக ஜான் போல்ட்டனை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு நியமித்துள்ளார்.
     அமெரிக்க அதிபர் மாளிகையில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றான தேசிய பாதுகாப்புக் கவுன்சில், பாதுகாப்பு விவகாரங்களில் அமெரிக்க அரசை வழிநடத்தி வருகிறது.
     ரஷியாவுடனான அமெரிக்க உறவு, வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான டிரம்ப்பின் சந்திப்பு போன்ற சர்வதேச விவகாரங்களில் தனது நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளவர்களை டிரம்ப் களையெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே மெக்மாஸ்டரை அவர் பதவி நீக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
     ஏற்கெனவே, தன்னோடு கருத்து வேறுபாடு கொண்டிருந்த வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்ஸனை இந்த மாதம் 13-ஆம் தேதி பதவி நீக்கம் செய்தார். அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநராக இருந்த மைக் பாம்பியே புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai