Enable Javscript for better performance
நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் திரும்ப அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    நச்சுத் தாக்குதல் விவகாரம்: ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதர் திரும்ப அழைப்பு

    By  பிரஸ்ùஸல்ஸ்,  |   Published on : 24th March 2018 02:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EU

    முன்னாள் உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில், ரஷியாவுக்கான தனது தூதரை ஐரோப்பிய யூனியன் அமைப்பு திரும்ப அழைத்துள்ளது.
     மேலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அந்தக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
     பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ùஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் 28 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.
     அப்போது, பிரிட்டனில், ரஷியாவின் முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்க்ரிபால் மற்றும் அவரது மகள் மீது நிகழ்த்தப்பட்ட நச்சுத் தாக்குதலின் பின்னணியில் ரஷிய அரசு இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
     மேலும், முன்னாள் உளவாளி மீதான நச்சுத் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரை திரும்ப அழைக்கவும் தலைவர்கள் முடிவு செய்தனர்.
     யூனியன் அளவில் மட்டுமின்றி, உறுப்பு நாடுகள் தனித் தனியாகவும் ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைககளை மேற்கொள்ளும் என்று லிதுவேனியா அதிபர் டாலியா கிரைபாஸ்கெய்டே தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் கூறுகையில், "அடுத்த வாரத்திலிருந்து ஏராளமான நாடுகள் தங்களது தேசிய அளவிலேயே ரஷியா மீது நடவடிக்கை எடுக்கும்' என்று கூறினார்.
     எனினும், தூதரை வாபஸ் பெறுவது குறித்து தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்று ரஷிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஆர்டியோம் கொஷின் தெரிவித்தார்.
     ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
     இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
     எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்தனர்.
     அதையடுத்து, ராணுவ ரகசியங்களைக் கசியவிட்டதன் மூலம் தேசத் துரோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
     இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், செர்கெய் ஸ்கிரிபாலுக்கும், மேலும் இரு கைதிகளும் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். ஸ்கிரிபாலுக்கு பிரிட்டன் அடைக்கலம் அளித்தது.
     இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபாலும், அவரது 33 வயது மகள் யுலியாவும் வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரப் பூங்கா ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டனர்.
     இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று குற்றம் சாட்டிய பிரிட்டன், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்கள் நாட்டிலிருந்து 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது. மேலும், ரஷியாவுடனான தங்களது ஒப்பந்தங்களை ரத்து செய்வதாகவும் அறிவித்தது.
     இதற்குப் பதிலடியாக, 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்ட ரஷியா, இருதரப்பு அறிவியல், கலாசார ஒத்துழைப்புக்கான பிரிட்டிஷ் கவுன்சிலையும் மூடியது.
     இந்தச் சூழலில், ரஷியாவுக்கான ஐரோப்பிய யூனியன் தூதரும் திரும்ப அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai