Enable Javscript for better performance
சிரியா போரிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும்: டிரம்ப்- Dinamani

சுடச்சுட

    

    சிரியா போரிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறும்: டிரம்ப்

    By DIN  |   Published on : 31st March 2018 12:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    trump

    சிரியா போரிலிருந்து அமெரிக்கா வெகு விரைவில் வெளியேறும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து ஓஹியோ மாகாணம், க்ளீவ்லாண்ட் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில்  அவர் பேசியதாவது: சிரியாவில் நமது படைகள் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகளை வீழ்த்திக் கொண்டிருக்கிறது. பயங்கரவாதிகளும் தோல்வியடைந்துவிட்டார்கள். அவர்களால் 'மதப் பேரரசு' என்று அழைக்கப்படும் பகுதி சிரியாவில் கொஞ்சமும் மிச்சமின்றி முழுவதுமாக விரைவில் அழிக்கப்படும்.
    அந்தப் பணியை முடித்துக் கொண்டு, அமெரிக்காவும் சிரியா போரிலிருந்து முழுமையாக வெளியேறும். மத்தியக் கிழக்கு நாடுகளில் போருக்காக நாம் 7 லட்சம் கோடி டாலரை (சுமார் ரூ.455 லட்சம் கோடி) வீணடித்துவிட்டோம். அந்தப் பகுதியில் நாம் பள்ளிகள் கட்டினோம். ஆனால், பயங்கரவாதிகள் அவற்றை தரைமட்டமாக்கினர். பிறகு மீண்டும் பள்ளிகள் கட்டினோம். ஆனால், அமெரிக்கப் பள்ளிகளுக்குத் தேவையான நிதியை அரசால் வழங்க முடிவதில்லை.
    மத்தியக் கிழக்கு நாடுகளுக்காக நாம் 7 லட்சம் கோடி டாலர் செலவழித்தும், நாம் திரும்பப் பெற்றது எவ்வளவு? ஒரு டாலர் கூட இல்லை என்றார் அவர்.
    'இன்னும் முக்கிய கடமை உள்ளது': இதற்கிடையே, சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை முற்றிலுமாக அழிக்கும் முக்கியக் கடைமை அமெரிக்காவுக்கு இன்னும் உள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டானா ஒயிட் கூறியதாவது: சிரியாவில், கடந்த ஓராண்டுக்கு முன்பு இருந்த அளவுக்கு, தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலசாலிகளாக இல்லை. அவர்கள் கைப்பற்றிய பகுதிகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, நிர்மூலமாக்கப்பட்டிருக்கின்றனர். எனினும், அந்த அமைப்பால் அமெரிக்காவுக்கும், பிற நாடுகளுக்கும் உள்ள அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக அழிக்கப்படவில்லை. எனவே, ஐ.எஸ். பயங்கரவாதத்தை சிரியா மண்ணிலிருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய கடமை நமக்கு இன்னும் இருக்கிறது என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai