Enable Javscript for better performance
மியான்மர் அதிபராகப் பொறுப்பேற்றார் வின் மியிந்த்- Dinamani

சுடச்சுட

    
    mying

    பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆங் சான் சூகியுடன் வின் மியிந்த்.

    மியான்மரின் புதிய அதிபராக, அந்த நாட்டு அரசின் தலைவர் ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளர் ஊ வின் மியிந்த் (66) வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
    இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
    துணை அதிபர்கள் மியிந்த் ஸ்வே மற்றும் ஹென்றி வேன் டியோ ஆகியோலும் இந்த நிகழ்ச்சியில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
    ஆங் சான் சூகி-யின் நெருங்கிய உதவியாளராக இருந்து, அந்த நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்ற டின் க்யாவ் (71), தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார்.
    ஏற்கெனவே, உடல் நலக் குறைவு காரணமாக அவர் கடந்த ஆண்டில் இரண்டு முறை வெளிநாடு சென்று சிகிச்சைப் பெற்றுத் திரும்பியதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில், கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது.
    எனினும், வெளிநாட்டினரை மணந்தவர்ளோ, வெளிநாட்டு குடியுரிமை கொண்டவர்களின் பெற்றோர்களோ நாட்டின் தலைமைப் பொறுப்பான அதிபர் பதவியை ஏற்க முடியாது என்று ஏற்கெனவே ராணுவ ஆட்சியாளர்கள் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்திருந்தனர்.
    அதன் காரணமாக, ஆங் சான் சூகியின் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றும், அவரால் அதிபர் பதவியை ஏற்க முடியாமல் போனது. அதையடுத்து, அரசின் தேசிய ஆலோசகர் என்ற, அரசமைப்புச் சட்ட முக்கியத்துவம் இல்லாத ஒரு பதவியை உருவாக்கி, அந்தப் பதவியை ஆங் சான் சூகி ஏற்றார்.
    அதிபர் பதவியில் அவருக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் உதவியாளர் டின் க்யாவை (71) அவரது கட்சியினர் தேர்ந்தெடுத்தனர். இதன் மூலம், மியான்மரின் அரசியல் அதிகாரத்தை அவர் கைவசம் வைத்திருந்தார்.
    இந்தச் சூழலில், உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வு வேண்டி டின் க்யா ராஜிநாமா செய்ததையடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு மியான்மர் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆங் சான் சூகியின் தீவிர ஆதரவாளரான ஊ வின் மியிந்த் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில் அவர் தற்போது பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
    இவர் அதிபர் ஆகியுள்ளதன் மூலம், மியான்மர் ஆட்சியில் உச்சபட்ச அரசியல் அதிகாரம் தொடர்ந்து ஆங் சான் சூகியிடமே இருக்கும் என்று கூறப்படுகிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai