Enable Javscript for better performance
60 அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு: நச்சுத் தாக்குதல் விவகாரத்தில் பதிலடி- Dinamani

சுடச்சுட

    

    60 அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வெளியேற ரஷியா உத்தரவு: நச்சுத் தாக்குதல் விவகாரத்தில் பதிலடி

    By DIN  |   Published on : 31st March 2018 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    us

    செயின்ட்ஸ் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம்.

    தங்கள் நாட்டுக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 60 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ரஷியா உத்தரவிட்டுள்ளது.
    முன்னாள் ரஷிய உளவாளி மீது பிரிட்டனில் நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் நாட்டிலிருந்து 60 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் வியாழக்கிழமை கூறியதாவது: முன்னாள் உளவாளி செர்கெய் ஸ்கிரிபால் மீது நச்சுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்ட விவகாரத்தில், எங்கள் நாட்டுக்கு எதிராக அமெரிக்க எடுத்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளோம்.
    அவற்றில், அமெரிக்கா திருப்பியனுப்பிய அதிகாரிகளின் எண்ணிக்கைக்கு இணையாக, 60 அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதும் ஒன்றாகும். 
    மேலும், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் செயல்படுவதற்கான அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.
    ரஷியத் தூதரக அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட மற்ற நாடுகளுக்கும் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர். ரஷியாவைச் சேர்ந்த செர்கெய் ஸ்க்ரிபால் (66), கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் அந்த நாட்டின் ராணுவ உளவு அமைப்பில் பணியாற்றி வந்தார்.
    இந்த நிலையில், பிரிட்டனின் உளவுப் பிரிவான எம்ஐ6-இலும் ரகசியமாக இணைந்த அவர், ரஷிய ராணுவ உளவுத் துறையில் பணியாற்றும் வாய்ப்பைப் பயன்படுத்தி பிரிட்டனுக்கு ரகசியத் தகவல்களை அளித்து வந்தார்.
    எனினும், அவரது நடவடிக்கையைக் கண்டுபிடித்த ரஷிய அதிகாரிகள், 2004-ஆம் ஆண்டு செர்கெய் ஸ்க்ரிபாலை கைது செய்து சிறையிலடைத்தனர்.
    இந்த நிலையில், உளவுக் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ், செர்கெய் ஸ்கிரிபால் விடுவிக்கப்பட்டு அவர் பிரிட்டனில் வசித்து வருகிறார். இந்தச் சூழலில், செர்கெய் ஸ்க்ரிபாலும், அவரது 33 வயது மகள் யுலியாவும் வில்ட்ஷைர் மாகாணத்தின் சாலிஸ்பரி நகரப் பூங்கா ஒன்றில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இந்த மாதம் 4-ஆம் தேதி மீட்கப்பட்டனர்.
    இந்தத் தாக்குதலுக்கு ரஷியாதான் காரணம் என்று குற்றம் சாட்டிய பிரிட்டன், இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தங்கள் நாட்டிலிருந்து 23 ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டது. 
    இதற்குப் பதிலடியாக, 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு ரஷியாவும் உத்தரவிட்டது.
    எனினும், பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் ஆகியவை தங்கள் நாடுகளிலிருந்து ரஷியத் தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு உத்தரவிட்டன.
    இந்தச் சூழலில், அமெரிக்கத் தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் முடிவை ரஷியா வெளியிட்டுள்ளது.
    இதற்கிடையே, தங்களுக்கு எதிரான தூதரக நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் பதிலடி கொடுக்க முடிவு செய்துள்ள ரஷிய அரசு, இதுகுறித்து தகவல்களை அளிக்க அந்த நாடுகளின் தூதர்களுக்குத் தெரிவிக்க நேரில் அழைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai