Enable Javscript for better performance
ஊழல் குற்றச்சாட்டு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் இல்லத்தில் அதிரடி சோதனை- Dinamani

சுடச்சுட

    

    ஊழல் குற்றச்சாட்டு: மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் இல்லத்தில் அதிரடி சோதனை

    By DIN  |   Published on : 18th May 2018 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    malay

    அதிரடி சோதனையின்போது நஜீபின் இல்லத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள்.

    ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் இல்லத்தில் போலீஸார் புதன்கிழமை நள்ளிரவு அதிரடி சோதனை நடத்தினர்.
    இதுகுறித்து நஜீபின் வழக்குரைஞர் ஹர்பால் சிங் கூறியதாவது:
    கோலாலம்பூரிலுள்ள நஜீப் ரஸாக்கின் இல்லத்திலும், அவருக்குச் சொந்தமான மற்றொரு அடுக்குமாடி குடியிருப்பிலும் புதன்கிழமை நள்ளிரவு போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
    நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது.
    கைப் பைகள், சில உடைகளைக் கூட போலீஸார் எடுத்துச் சென்றனர். அவரை மனரீதியில் துன்புறுத்தும் நோக்கத்திலேயே இந்த சோதனை நடத்தப்பட்டது. அந்த இல்லத்தில் வீட்டுப் பொருள்கள் மட்டுமே இருந்தன என்றார் அவர்.
    சோதனையின்போது கைப்பைகள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து தகவல்கள் வெளியானதும், நஜீபின் மனைவி வெளிநாடுகளுக்குச் சென்று விதம் விதமான கைப் பைகள், ஆடைகளை வாங்கிக் குவித்ததாகக் கூறப்படுவதை நினைவுபடுத்தி சமூக வலைதளங்களில் பரபரப்பான பதிவுகள் வெளியிடப்பட்டன.
    மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அப்போதைய பிரதமர் நஜீப் ரஸாக் தலைமையிலான பாரிஸன் நேஷனல் கூட்டணி தோல்வியடைந்தது.
    சுதந்திரம் பெற்றது முதல் அந்த நாட்டை தொடர்ந்து 61 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த அந்தக் கூட்டணி, தற்பதுதான் முதல் முறையாக தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
    அந்தத் தேர்தலில், பகதான் ஹரப்பன் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றியடைந்தது. அதையடுத்து, நஷீதை எதிர்த்து பிரசாரம் செய்த முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது (92) புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் கோடிக்கணக்கான டாலர்கள் ஊழல் செய்ததாக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்குக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவருக்கு எதிரான பிரசாரத்தில் மகாதிர் ஈடுபட்டார்.
    அத்துடன், தேர்தலில் தனக்கு ஆதரவு அளித்த பகதான் ஹரப்பன் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான அன்வர் இப்ராஹிமையும் மகாதிர் சிறையிலிருந்து விடுவித்தார்.
    பாலியல் குற்றச்சாட்டு காரணமாக நஜீப் ஆட்சிக் காலத்தின்போது சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதையடுத்து அவர் புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
    ஏற்கெனவே தேர்தல் சமயத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டபடி, இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பிறகு அன்வர் இப்ராஹிமுக்கு பிரதமர் பதவியை மகாதிர் முகமது விட்டுத் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    இந்த நிலையில், ஊழல் புகார் தொடர்பாக முன்னள் பிரதமர் நஜீப் இல்லத்தில் தற்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai