Enable Javscript for better performance
'பொறுத்திருந்து பார்ப்போம்': கிம்முடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    'பொறுத்திருந்து பார்ப்போம்': கிம்முடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கருத்து

    By DIN  |   Published on : 18th May 2018 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    trump

    சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்குடனான சந்திப்பை ரத்து செய்வதாக அந்த நாடு எச்சரித்துள்ளது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
    கடந்த ஆண்டின் இறுதிவரை சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஏவுகணைச் சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து வடகொரியா நடத்தி வந்தது.
    இதற்குப் பதிலடியாக, ஐ.நா. அமைப்பும், அமெரிக்காவும், வட கொரியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய நாடுகளுக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
    இந்தச் சூழலில், தென் கொரியாவில் மார்ச் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் துவக்க விழாவுக்கு தனது தங்கை கிம் யோ-ஜோங்கை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் அனுப்பி வைத்தார்.
    அதனைத் தொடர்ந்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்ட நிலையில், கிம் ஜோங்-உன், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்கச் சந்திப்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்றது. அந்தச் சந்திப்பில், கொரிய தீபகற்பத்தில் நிரந்தர அமைதியை நிலவச் செய்வதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
    இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் வட கொரிய அதிபர் கிம் ஜோங்கின் சந்திப்பு சிங்கப்பூரில் ஜூன் 12-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    இந்த நிலையில், லிபியாவில் நடந்ததைப் போல் வட கொரியா அனைத்து அணு ஆயுதங்களையும் ஒப்படைத்தால் மட்டுமே அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
    இதனால் அதிருப்தியடைந்த வட கொரியா, அணு ஆயுத ஒழிப்பு விவகாரத்தில் அமெரிக்கா தன்னிச்சையாக நடந்து கொண்டால் டிரம்ப்-கிம் இடையிலான பேச்சுவர்த்தை ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
    இதுகுறித்து அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
    ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் சந்திப்பை ரத்து செய்வது குறித்து வட கொரியாவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே, இதுகுறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai