இந்தோனேசிய விமான விபத்து: தேடுதல் பணியில் ஈடுபட்ட நீச்சல் வீரர் மரணம்

இந்தோனேசியாவில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசிய விமான விபத்து: தேடுதல் பணியில் ஈடுபட்ட நீச்சல் வீரர் மரணம்


ஜகார்த்தா: இந்தோனேசியாவில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவர் மரணம் அடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அக்டோபர் 29ம் தேதி ஜாவா கடற்பரப்பில் விழுந்து விபத்துக்குள்ளான லையன் ஏர் விமானத்தில் பயணித்த 189 பேரும் உயிரிழந்தனர்.

விபத்து நேர்ந்த இடத்தில், உயிரிழந்தவர்களின் உடல்களையும், விமானத்தின் பாகங்களையும் தேடும் பணியில் ஏராளமான நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் சியாச்ருல் ஆன்டோ என்ற இந்தோனேசிய மீட்புப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் வெள்ளிக்கிழமை மாலை மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியாவைச் சேர்ந்த லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங்-737 மேக்ஸ் ரக விமானமொன்று தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்க்கா பெலிதுங் மாகாணத் தலைநகர் பங்கால் பினாங் நகர விமான நிலையத்தை நோக்கி உள்ளூர் நேரப்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி அதிகாலை 5 மணி) புறப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த விமானி பவ்ய சுனேஜா அந்த விமானத்தை ஓட்டிச் சென்றார்.

விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே, மீண்டும் விமான நிலையம் திரும்புவதற்கு விமானி சுனேஜா அனுமதி கேட்டார். எனினும், அடுத்த 10 நிமிடங்களில் அந்த விமானம் கடலுக்குள் விழுந்து நொறுங்கியது.

விபத்துக்குள்ளானபோது அந்த விமானத்தில் 181 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் இருந்தனர். இந்த விபத்தில், அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com