ஆசியா பீபி பாகிஸ்தானில் தான் உள்ளார்: ஊடகங்கள் மீது அரசு காட்டம்

ஆசியா பீபி பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்றும் அவர் நாட்டை வெளியேறிவிட்டதாக ஊடகங்கள் வெளியிட்டது பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 
ஆசியா பீபி பாகிஸ்தானில் தான் உள்ளார்: ஊடகங்கள் மீது அரசு காட்டம்

ஆசியா பீபி பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்றும் அவர் நாட்டை வெளியேறிவிட்டதாக ஊடகங்கள் வெளியிட்டது பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இஸ்லாம் மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி, பாகிஸ்தானின் மத நிந்தனைச் சட்டத்தின் கீழ் ஆசியா பீபி மீது கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. அதையடுத்து அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை, லாகூர் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு உறுதி செய்தது. 

இந்த நிலையில், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், முரண்பட்ட சாட்சியங்கள், தவறான வழக்கு நடைமுறைகள் ஆகியவற்றைக் காரணம் காட்டி ஆசியா பீபியை இந்த வழக்கிலிருந்து கடந்த மாதம் 31-ஆம் தேதி விடுவித்தது. மேலும், கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை உடனடியாக விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டது.

இதற்கு, பாகிஸ்தானின் மதவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டன. லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் சாலைகளில் தடுப்பு ஏற்படுத்தி அவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக, பஞ்சாப், கைபர்-பாக்துன்கவா உள்ளிட்ட மாகாணங்கள், கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற நகரங்களிலும் பள்ளிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, சிறையில் இருந்து வெளியான அவர் நாட்டைவிட்டு வெளியேறியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இதனால், பாகிஸ்தானில் சர்ச்சை வெடித்தது. இதைத்தொடர்ந்து, ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு பாகிஸ்தான் தரப்பில் மறுப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் முகமது ஃபைசல் கூறுகையில், 

"ஆசியா பீபி நாட்டைவிட்டு வெளியேறியதாக வரும் செய்திகளில் உண்மையில்லை. அது பொய்யான செய்தி. ஆசியா பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் உள்ளார். அவர் தற்போது விடுதலையான குடிமகள். ஒரு சுதந்திர குடிமகள் அவருக்கு எங்கே செல்லவேண்டுமோ அங்கு செல்லலாம். அவர் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் தான் உள்ளார். பாகிஸ்தான் அரசு அவரை பாதுகாப்பதற்காக உள்ளது" என்றார்.   

ஊடகங்களில் வெளியான செய்தியை பொறுப்பற்றது என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபவாத் சௌதரி குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, அவர் சுட்டுரை பக்கத்தில் கூறுகையில், 

"தலைப்புச் செய்திகளுக்காக தவறான செய்திகளை பரப்புவது தற்போது விதிமுறையாகிவிட்டது. ஆசியா பீபி வழக்கு சர்ச்சைக்குரிய விஷயம். அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்பதை உறுதிசெய்யாமல் செய்திகளை வெளியிடுவது மிகவும் பொறுப்பற்ற செயல். ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படவேண்டும் என்பதை நான் கடுமையாக வலியுறுத்துகிறேன்" என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com