இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா உத்தரவு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர் சிறீசேனா உத்தரவு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  

கடந்த மாதம் 26-ஆம் தேதி, நாட்டின் பிரதமராகப் பொறுப்பு வகித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் விக்ரமசிங்கவை அப்பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவரது கட்சியுடன் வைத்திருந்த கூட்டணியைத் துண்டித்துக் கொள்வதாகவும் அறிவித்த அதிபர் சிறீசேனா, மஹிந்த ராஜபட்சவை புதிய பிரதமராக நியமித்து, அவருக்குப் பதவிப்பிரமாணமும் செய்து வைத்தார்.

இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ஆம் தேதி கூடும் என்றும் அப்போது ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிப்பார் என்றும் அதிபர் சிறீசேனா அறிவித்தார். 

எனினும், ராஜபட்சவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது என்றும், ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை விக்ரமசிங்க தான் பிரதமர் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூர்யா சிறீசேனாவுக்கு கடிதம் எழுதினார். 

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி கட்சியில் எடுத்த முடிவின்படி சபாநாயகராக தினேஷ் குணவர்த்தனே பொறுப்பேற்றுக்கொண்டார். இப்படி இரண்டு பிரதமர், இரண்டு சபாநாயகர் என்று நாளுக்கு நாள் புதிய சர்ச்சையை இலங்கை எதிர்கொண்டு வந்தது. 

இலங்கையில் மொத்தம் உள்ள 225 தொகுதிகளில் ராஜபட்ச கட்சிக்கு 90 முதல் 95 எம்பிக்களின் ஆதரவு உள்ளது. விக்ரமசிங்க கட்சிக்கு 116 எம்பிக்கள் வரை ஆதரவு உள்ளது. அதனால், நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக பெரும்பான்மைக்கான எம்பிக்கள் ஆதரவை திரட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இதன் ஒருபகுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை கோர ராஜபட்ச முன்வந்தது. ஆனால், 16 எம்பிக்கள் கொண்ட தங்களது ஆதரவு விக்ரமசிங்கவுக்கு தான் என்று தெரிவித்தனர். இதனால், ராஜபட்ச வரும் 14-ஆம் தேதி கூடவுள்ள நாடாளுமன்றக் கூட்டதில் பெரும்பான்மையை நிரூபிப்பது கடினம் என்று கணிக்கப்பட்டது. 

இந்நிலையில், வரும் 14-ஆம் தேதி ராஜபட்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் முன்னதாகவே இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அந்நாட்டு அதிபர் சிறீசேனா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம், வரும் சில நாட்களில் இலங்கையில் மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com