மருத்துவம்: அமெரிக்கர், ஜப்பானியருக்கு நோபல் பரிசு

புற்று நோய் மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் அலிஸன் மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி டாஸுகு ஹோஞ்சோ ஆகிய இருவரும்
மருத்துவம்: அமெரிக்கர், ஜப்பானியருக்கு நோபல் பரிசு

புற்று நோய் மருத்துவத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் அலிஸன் மற்றும் ஜப்பானிய விஞ்ஞானி டாஸுகு ஹோஞ்சோ ஆகிய இருவரும் நிகழாண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும், புற்று நோய் அணுக்களை நேரடியாக அழிக்கும் சிகிச்சை முறைக்கு மாற்றாக, நமது உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே அந்த அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக தேர்வுக் குழு திங்கள்கிழமை தெரிவித்தது.
1995-ஆம் ஆண்டில், மனித உடலின் நோய் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கு தடை விசைபோல் செயல்படும் மிக முக்கியமான மூலக்கூறு ஒன்றை அலிஸன் கண்டறிந்தார். ரத்தத்தின் வெள்ளை அணுக்களில் உள்ள சிடிஎல்ஏ-4 என்ற மூலக்கூறுதான் இத்தகைய தடை விசையாக இயங்குவதை அவர் கண்டறிந்தார்.
அதைப் போலவே, நோயெதிர்ப்பு அணுக்களில் உள்ள பி.டி.1 என்ற புரதமும், எதிர்ப்புச் செயல்பாடுகளுக்கான தடை விசைகளாகப் பயன்படுகின்றன என்பதை ஏறத்தாழ அதே காலகட்டத்தில் டாஸுகு ஹோஞ்சோ கண்டறிந்தார். 
இந்த இருவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு, நோயெதிர்ப்பு சக்தியின் வீரியத்தை அதிகரித்து புற்று நோய் அணுக்களைக் கொல்லும் மருந்துகள் உருவாக்கப்பட்டன.
ஜேம்ஸ் அலிஸன் (70)
அமெரிக்காவிலுள்ள எம்.டி. ஆண்டர்ஸன் புற்றுநோய் மைய நிர்வாக இயக்குநரான ஜேம்ஸ் அலிஸன், நோயெதிர்ப்பியல் துறை வல்லுநர் ஆவார். புற்று நோய் சிகிச்சையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக, 13-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
டாஸுகு ஹோஞ்சோ (76)
ஜப்பானைச் சேர்ந்த நோயெதிர்ப்புத் துறை வல்லுநரான டாஸுகு ஹோஞ்சோ, அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்தவர். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இவர் ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.
நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல், ஸ்வீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு பிறந்த அவர், வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.
டைனமைட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
தனது கடைசி உயில் முலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.
அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம் ஆகிய மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com