அரசிடமிருந்து அச்சுறுத்தல்? 4 மாலத்தீவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி,
அரசிடமிருந்து அச்சுறுத்தல்? 4 மாலத்தீவு தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்த நாட்டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங்கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதையடுத்து, 5 உறுப்பினர்களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார்.
 இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில் 3 பேர், தலைநகர் கொழும்பில் தங்கியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 இதுகுறித்து அந்த நான்கு பேரில் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 மாலத்தீவு அதிபர் தேர்தல் தொடர்பாக, எங்களுக்கு மிரட்டல்கள் வந்ததால் அங்கிருந்து தப்பி வந்துள்ளோம்.
 அந்த நாட்டில் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
 மாலத்தீவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் முகமது யாமீன் போட்டியிட்டார்.
 தேர்தலுக்கு முன்னரே தனது அரசியல் எதிரிகளை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து சிறையில் அடைத்துள்ளதால், அந்தத் தேர்தலில் அதிபர் யாமீன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டது.
 மேலும், ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை இருட்டடிப்பு செய்ததாகவும், தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் வகையில், அதிபர் யாமீனை எதிர்த்து, எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இப்ராஹிம் முகமது சோலீ தேர்தலில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 எனினும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவித்து வந்தனர்.
 இந்தச் சூழலில், அதிபர் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதாகவும், எனவே அந்தத் தேர்தல் முடிவுகளை செல்லாததாக அறிவிக்கும்படியும் கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிபர் யாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை ஞாயிற்றுக்கிழமை (அக். 14) நடைபெறும் நிலையில், தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் முதல் சுற்றிலேயே முன்னாள் அதிபர் முகமது ரஷீத் வெற்றி பெற்றார்.
 எனினும், அந்தத் தேர்தல் முடிவை உச்ச நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது. அதனால் கிடைத்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல்லா யாமீன், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இரண்டாம் சுற்றுத் தேர்தலில் வெற்றி பெற்றது நினைவுகூரத்தக்கது.
 "பொதுமக்களின் கோபத்துக்கு அஞ்சி...'

அதிபர் தேர்தலில் தேர்தல் ஆணையம் முறேகேடு செய்தது தொடர்பான ஆடியோ ஆதாரங்கள் வெளியானதால், பொதுமக்களின் கோபத்துக்கு அஞ்சியே 4 அதிகாரிகளும் இலங்கை சென்றுள்ளதாக அதிபர் யாமீன் தலைமையிலான மாலத்தீவு முன்னேற்றக் கட்சி (பிபிஎம்) தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலர் முகமது ஹுசைன் ஷெரீஃப் (படம்) செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
 அரசால் தேர்தல் ஆணைய அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நகைப்புரியது ஆகும்.
 ஆணையத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கிலிருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்புவதற்காகவே இந்த நாடகம் நடத்தப்படுகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com