நேபாளத்தில் பனிச்சரிவு: மலையேற்றத்தில் ஈடுபட்ட 9 பேர் பலி

நேபாளத்தில் குர்ஜா மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த தென்கொரியாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

நேபாளத்தில் குர்ஜா மலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதால், மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த தென்கொரியாவைச் சேர்ந்த 5 பேர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
 மலையேற்றத்துக்கான ஏற்பாடுகளை செய்துதரும் முகாமின் மேலாண் இயக்குநர் வாங்சு ஷெர்பா கூறியதாவது:
 நேபாளத்தின் மேற்கு பகுதியில் உள்ள தௌலாகிரி மலைக்கு அருகே சுமார் 11,500 அடி உயரத்தில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென பனிப்புயல் உருவானது. அங்குள்ள முகாமில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 9 பேர் தங்கியிருந்தனர். பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் முகாம் புதைந்தது. இதில், முகாமுக்குள் இருந்த 9 பேரும் உயிரிழந்தனர்.
 அவர்களில் 5 பேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள். மலையேற்ற குழுத் தலைவர் கிம் சாங்-ஹோவும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.
 குர்ஜா என்ற கிராமத்திலிருந்து கடந்த 7-ஆம் தேதி அவர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.
 நல்ல பருவநிலைக்காக அவர்கள் அந்த முகாமில் காத்திருந்தனர். சுமார் 26,000 அடி உயரத்தில் 14 சிகரங்களில் கூடுதல் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் ஏறிய முதல் தென்கொரியர் கிம் சாங்-ஹோ.
 உயிரிழந்தவர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
 அந்தப் பகுதிக்கு மீட்புப் பணிக்காக ஹெலிகாப்டர் சனிக்கிழமை காலை அனுப்பி வைக்கப்பட்டது என்று வாங்சு ஷெர்பா தெரிவித்தார்.
 குர்ஜா மலை சுமார் 23, 500 அடி உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 இதற்கு முன்பு கடந்த 2015-ஆம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 19 பேர் உயிரிழந்தனர். 61 பேர் காயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com