"வர்த்தகப் போரின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்': உலக வங்கி- ஐஎம்எஃப் அறிவுறுத்தல்

"நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் முதலான பல்வேறு பிரச்னைகளின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்' என்று உலக வங்கி-பன்னாட்டு நிதியம்(ஐஎம்எஃப்) ஆகியவை நாடுகளை அறிவுறுத்தியுள்ளன.

"நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் முதலான பல்வேறு பிரச்னைகளின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்' என்று உலக வங்கி-பன்னாட்டு நிதியம்(ஐஎம்எஃப்) ஆகியவை நாடுகளை அறிவுறுத்தியுள்ளன.
 உலக வங்கி-பன்னாட்டு நிதியம் ஆகியவை இடையிலான வருடாந்திர உச்சி மாநாடு, இந்தோனேஷிய நாட்டிலுள்ள பாலி நகரில் நடைபெற்று வந்தது. இந்த மாநாட்டின் இறுதி நாளான சனிக்கிழமை இரு அமைப்புகளும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போரும், பொருளாதாரப் பிரச்னைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் அந்தந்த நாடுகள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்த நாடுகளைச் சார்ந்துள்ள மற்ற நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. இதனால், அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
 நிலையான வளர்ச்சி: வர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் நாடுகள், மேலும் பதற்றத்தை அதிகரிக்காமல், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவற்றுக்கான தீர்வில் ஈடுபட வேண்டும். வர்த்தகப் போரினால் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தயாராக இருக்க வேண்டும்.
 மற்ற நாடுகளுடன் ஒருங்கிணைந்து பயணித்தால், உலக நாடுகள் அனைத்தும் நிலையான வளர்ச்சியை அடையும் என்பதை அனைத்து நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 உலகின் பொருளாதார வளர்ச்சி: உச்சி மாநாட்டின் தொடக்கத்தில், உலகின் பொருளாதார வளர்ச்சி 2018-ஆம் ஆண்டில், 3.7 சதவீதமாக இருக்கும் என்று பன்னாட்டு நிதியம் கணித்து அறிக்கை வெளியிட்டது. முன்னதாக, அது 3.9 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்தது. நாடுகளுக்கிடையே நடைபெற்று வரும் வர்த்தகப் போர் மற்றும் பல்வேறு காரணங்களால், பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 மாநாட்டின் இடையே, பன்னாட்டு நிதியத்தின் உறுப்பு நாடுகள் அனைத்தும், தங்கள் நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக, பணமதிப்பைக் குறைத்துக்கொள்ளாமலிருக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டன.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com