அணு ஆயுத ஒப்பந்த விவகாரம்: ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சருடன் ஜான் போல்ட்டன் ஆலோசனை

நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் அமெரிக்க - ரஷிய ஒப்பந்தத்திலிருந்து விலகவிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள சூழலில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைகுலுக்கிக் கொள்ளும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன்,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது கைகுலுக்கிக் கொள்ளும் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன்,


நடுத்தர தொலைவு அணு ஆயுத ஏவுகணைகளைக் கைவிடும் அமெரிக்க - ரஷிய ஒப்பந்தத்திலிருந்து விலகவிருப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள சூழலில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் ரஷியாவில் அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சருடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
அணு ஆயுதங்களை ஏந்தி, 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ. தொலைவு வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளைக் கைவிட அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் கடந்த 1987-ஆம் ஆண்டு ஒப்பந்தம் உருவானது.
இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அறிவித்தார்.
இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டன் 2 நாள் சுற்றுப் பயணமாக ரஷியாவுக்கு திங்கள்கிழமை வந்தார்.
அதனைத் தொடர்ந்து, ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கெய் ஷோய்குவுடன் அவர் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் செர்கெய் ஷோய்கு கூறியதாவது:
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்ட்டனின் 2 நாள் ரஷிய சுற்றுப் பயணம், இரு நாடுகளிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதுபோன்ற சிறிய அளவிலான முன்முயற்சிகள் கூட, அமெரிக்க - ரஷிய உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு அடித்தளம் அமைக்கும்.
சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே எதிர்பாராத மோதலைத் தவிர்க்கும் வகையில் இரு நாடுகளும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்தியிருந்தன.
அந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து ஜான் போல்ட்டன் கூறியதாவது:
ரஷியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும் என்ற அதிபர் டிரம்ப்பின் உறுதிப்பாட்டுக்கு செயல்வடிவம் கொடுக்கவே இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்.
சிரியா போரில் இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மிகச் சிறந்த முறையிலும், நல்ல பலனை அளிப்பதாகவும் விளங்கி வருகிறது.
அந்த ஒத்துழைப்பை, மேலும் பல்வேறு வழிமுறைகளில் அதிகரிக்க வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்கா - ரஷியா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து இருவருமே கருத்து எதையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே பனிப்போர் நடைபெற்று வந்த காலகட்டத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை எல்லைப் பகுதியில் சோவியத் ரஷியா நிறுத்தியது.
அதனை எதிர்கொள்வதற்காக, நேட்டோ படையும் அமெரிக்காவின் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்தி வைத்தது.
இதனால் இரு தரப்பிலும் அணு ஆயுதப் போர் ஏற்படும் அபாயம் அதிகரித்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷியாவுக்கும் இடையே 1981-ஆம் ஆண்டில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
சுமார் 6 ஆண்டுகளுக்கு நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அணு ஆயுதத் தாக்குதல் நிகழ்த்தும் திறன் கொண்ட நடுத்தர தொலைவு ஏவுகணைகளை முற்றிலுமாகக் கைவிட இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
நடுத்தர தொலைவு அணு ஆயுத ஒப்பந்தம் எனப் பெயரிடப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனும், சோவியத் யூனியன் அதிபராக இருந்த மிகயீல் கோர்பசேவும் கையெழுத்திட்டனர்.
அந்த ஒப்பந்தத்தின்படி, தங்களிடம் ஏற்கெனவே இருந்த நடுத்தர தொலைவு ஏவுகணைகள், அவற்றை ஏவும் சாதனங்கள், எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றை எதிர் தரப்பினரின் கண்காணிப்பின் கீழ் அழிக்க அமெரிக்காவும் சோவியத் ரஷியாவும் ஒப்புக் கொண்டன.
இந்த நிலையில், அணு ஆயுத ஒப்பந்தத்தை ரஷியா மீறி வருவதால் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகப் போவதாக சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
எனினும், அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டால், உலகில் அணு ஆயுதப் போர் அபாயம் மேலும் அதிகரிக்கும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் அமெரிக்காவை திங்கள்கிழமை எச்சரித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com