நேருவுக்கு பல் மருத்துவராக பணியாற்றிய பாக். புதிய அதிபரின் தந்தை!

பாகிஸ்தானின் 13-ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆரிஃப் அல்வி-க்கும், இந்தியாவுக்குமான தொடர்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 
நேருவுக்கு பல் மருத்துவராக பணியாற்றிய பாக். புதிய அதிபரின் தந்தை!

பாகிஸ்தானின் 13-ஆவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆரிஃப் அல்வி-க்கும், இந்தியாவுக்குமான தொடர்பு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் புதிய பாக். அதிபரின் தந்தை மருத்துவர். ஹபிப்-உர்-ரஹ்மான் இலாஹி அல்வி, முன்னாள் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு பல் மருத்துவராகப் பணியாற்றியுள்ளார். 

பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வரலாறு தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்டுள்ள அல்வியின் சுயசரிதையில் இவ்விவகாரம் தெரியவந்துள்ளது. மேலும் அல்விக்கு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு எழுதிய கடிதங்களையும் பத்திரமாக வைத்திருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். சுதந்திரத்துக்கு முன்பு ஒன்றுபட்ட இந்தியாவில் பல் மருத்துவம் பயின்ற அவரது குடும்பம், 1947-க்குப் பின்னர் கராச்சியில் உள்ள சத்தர் பகுதிக்கு குடிபெயர்ந்தது. 

பிடிஐ கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், 2006 முதல் 2013 வரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக செயல்பட்ட பாகிஸ்தானின் புதிய அதிபராகவும் பதவியேற்றுள்ள ஆரிஃப் அல்வி (69), கூட பல் மருத்துவர் ஆவார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான இவரும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மான்ட்மோரன்ஸி பல் மருத்துவ பல்கலை.யில் பல் மருத்துவத்தில் தன்னுடைய இளநிலை மருத்துவப் படிப்பை முடித்தார்.

பின்னர் ப்ரோஸ்தோடான்டிக்ஸ் பிரிவில் 1975-ல், ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலையில் முதுகலையில் தேர்ச்சிபெற்றார். இதையடுத்து 1984-ஆம் ஆண்டு சான் பிரான்ஸிஸ்கோ-வில் அமைந்துள்ள பசிஃபிக் பல்கலை.யில் ஆர்த்தோடான்டிக்ஸ் பிரிவில் முதுகலைப் படிப்பை முடித்தார்.  

இதையடுத்து பாகிஸ்தான் தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் அமைப்பில் அறங்காவலராக செயல்பட்டார். பின்னாளில் கராச்சியில் உள்ள ஜின்னாவின் மொஹட்டா மாளிகை உட்பட முக்கிய சொத்துக்கள் பலவற்றை ஜின்னாவின் தங்கை ஷிரின்பாய் ஜின்னாவால் அல்விக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள சொத்துக்களின் அறங்காவலர் குழுத் தலைவராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பாகிஸ்தானின் 13-ஆவது அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் சார்பில் மெளலானா பாஸில் உர் ரெஹ்மான், பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் அய்ஸாஸ் ஆஷன் ஆகியோருக்கிடையிலான மும்முனைப் போட்டி நடைபெற்றது.

இதில், ஆரிஃப் அல்வி வெற்றியடைந்தார். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் பதிவான 430 வாக்குகளில், அல்விக்கு 212 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரெஹ்மானுக்கு 131 வாக்குகளும், ஆஷனுக்கு 81 வாக்குகளும் கிடைத்தன. 6 வாக்குககள் நிராகரிக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com