வெளிநாட்டில் படிக்கச் செல்லும் மகளுக்காக ரூ.10 கோடியில் மாளிகை
By லண்டன், | Published on : 16th September 2018 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கச் செல்லும் தனது மகளுக்காக, இந்திய கோடீசுவரர் ஒருவர் ரூ.10 கோடி மதிப்பிலான மாளிகை ஒன்றை வாங்கியுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள "ஈடன் மாளிகை'யை, அந்தக் கோடீசுவரர் ரூ.10 கோடிக்கு வாங்கியுள்ளார்.
கடந்த 1860-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மாளிகை, முதல் உலகப் போரில் இங்கிலாந்தின் படைத் தளபதிகளுள் ஒருவராக இருந்த இயர்ல் ஹேக்குக்குச் சொந்தமானதாகும். 8 படுக்கையறைகளைக் கொண்ட இந்த மாளிகை, ஒரு தனிப்பட்ட திரையரங்கம், மது குடிக்கும் இடம், 5 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழுவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும், தனது மகள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில், அவரைக் கவனித்துக் கொள்ள மாளிகை மேலாளர் ஒருவர், 3 பாதுகாவலர்கள், தோட்டக்காரர் ஒருவர், பணிப்பெண் ஒருவர், சமையல்காரர் ஒருவர், தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகளில் சிறந்த தனிப்பட்ட சமையல்காரர் ஒருவர், 3 உதவியாளர்கள், வாகன ஓட்டுநர் ஒருவர் உள்பட 12 வேலையாட்களையும் அந்த மாளிகையில் கோடீசுவரர் நியமித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், "இந்த நகரத்தில் 20,000 க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். அவர்களின் கண்களிலிருந்து தப்பித்து, மிகப் பெரிய மாளிகையில் அந்தப் பெண் தனித்து வாழ முடியாது.
மேலும், 12 பணியாட்களுடன் ஒரு மாளிகையில் தனித்து வசிக்கும் போது, இந்தப் பல்கலைக்கழகம் அளிக்கும் முழுச் சுதந்திரத்தையும் அவரால் அனுபவிக்க முடியாது' என்று தெரிவித்தார்.
மற்றொரு மாணவர் ஒருவர், "தற்போதைய 21-ஆம் நூற்றாண்டில், பணியாட்களை வைத்துக்கொண்டு தனித்து வாழ்வது என்பது மிகச் சிறந்த ஒரு முடிவாக இருக்காது' என்று தெரிவித்தார்.
இருந்தபோதிலும், அந்தக் கோடீசுவரர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.