ஈரானுடன் வர்த்தகம் செய்தால் கடும் நடவடிக்கை! உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடையை மீறி அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டால், இதுவரை இல்லாத மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் கடும் நடவடிக்கை! உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடையை மீறி அந்த நாட்டுடன் வர்த்தகம் மேற்கொண்டால், இதுவரை இல்லாத மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயோ கூறியதாவது:
 ஈரான் மீது நாங்கள் விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவதற்கு, வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி இறுதிக் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேதியை அலட்சியப்படுத்தும் தவறை எந்த நாடும் செய்துவிட வேண்டாம்.
 அந்தக் கெடுவுக்குப் பிறகும் ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள், இதுவரை இல்லாத வகையிலான மிகக் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
 விதிவிலக்கு: ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடைகளிலிருந்து சில நாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. அதுகுறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
 ஏற்கெனவே, ஈரானுடனான வர்த்தக நடவடிக்கைகளைக் குறைத்து வரும் நாடுகள், நவம்பர் 4 கெடுவுக்குப் பிறகு அந்த வர்த்தக உறவை முழுமையாகத் துண்டிக்க வேண்டியிருக்கும்.
 அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து, ஈரானின் மோசமான நடவடிக்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் பேசி வருகிறார்.
 யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஏவுகணைகளை அளித்து, சவூதி அரேபியா மீது தாக்குதல் நடத்த வைப்பது ஈரான்தான்.
 அதே போல், பல்வேறு நாடுகளில் அமெரிக்க நலன்களுக்கு எதிராக ஷியா பிரிவு படையினரைத் தூண்டி விடுவதும் அந்த நாடுதான்.
 ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்வது, இத்தகைய மோசமான நடவடிக்கைகளுக்கு துணை போவதற்கு ஒப்பாகும்.
 அணு சக்தி ஒப்பந்தம் ரத்தானால், அணு ஆயுதங்கள் தொடர்பான பணிகள் முன்னரை விட தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்று ஈரான் தலைவர்கள் மிரட்டுகின்றனர்.
 இதன் மூலம், ஏற்கனவே அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த அணுசக்தி திட்டம் அவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 தனது அணுசக்தித் திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரானும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளும் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் ஒப்பந்தம் மேற்கொண்டன.
 ஒபாமா அதிபராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சியின் பலனாக உருவான இந்த ஒப்பந்தம், ஈரானை அணு ஆயுதங்கள் செய்யவிடாமல் தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என்று டொனால்ட் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
 இந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக டிரம்ப் கடந்த மே மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.
 இதற்கு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகளான ரஷியா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி ஆகிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 இந்தச் சூழலில், அந்த அணுசக்தி ஒப்பந்தம் காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், மீண்டும் செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
 அதன்படி, அமெரிக்க டாலர்களை ஈரான் பெறுவதற்கும், கார்கள், தரைவிரிப்புகள் உள்ளிட்ட முக்கிய பொருள்களை அந்த நாடு ஏற்றுமதி - இறக்குமதி செய்வதற்குமான தடை கடந்த மாதம் அமலுக்கு வந்தது.
 அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த மற்ற நாடுகளின் ஒப்புதலின்றி இந்தத் தடையை டிரம்ப் தன்னிச்சையாக அறிவித்திருந்தது.
 அதன் தொடர்ச்சியாக, ஈரான் மீதான மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகள் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
 இந்தச் சூழலில், மைக்கேல் பாம்பேயோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 இக்கட்டில் ஈரான்!
 வரும் நவம்பர் 4-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள்தான் ஈரானுக்கு மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 அந்தப் பொருளாதாரத் தடை உத்தரவு, ஈரானின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான கச்சா எண்ணெய் உள்ளிட்ட 5 முக்கியப் பொருள்களின் இறக்குமதி - ஏற்றுமதியை தடை செய்கிறது.
 ஈரானிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் இந்தியா, சீனா, துருக்கி ஆகிய நாடுகள் அமெரிக்கப் பொருளாதாரத் தடையை அலட்சியம் செய்தாலும்கூட, அந்தத் தடை ஈரானின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 இந்தியாவை பாதிக்குமா?
 ஈரானிடமிருந்து பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
 இந்த நிலையில், நவம்பர் 4-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கும் பொருளாதாரத் தடைகளிலிருந்து இந்தியாவுக்கு விதிவிலக்கு அளிக்கப்படாவிட்டால் அது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
 ஏற்கெனவே, அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியின் அளவை இந்தியா குறைத்துக் கொண்டுள்ளது.
 எனினும், நவம்பர் 4-க்குப் பிறகு அந்த இறக்குமதியை இந்தியாவால் முழுமையாக நிறுத்த முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், ஈரானில் இந்தியா மேம்படுத்தி வரும் முக்கியத்துவம் வாய்ந்த சாபஹார் துறைமுகப் பணிகளும் இந்த பொருளாதாரத் தடையால் பாதிக்கப்படும்.
 இந்தச் சூழலில், புதிய பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு பெறுவதற்காக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பேயேவுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
 எனவே, ஈரான் மீதான புதிய பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com