நவாஸ், மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது மீதான சிறைத் தண்டனை ரத்து

கடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது. 
நவாஸ், மகள் மரியம் மற்றும் மருமகன் முகமது மீதான சிறைத் தண்டனை ரத்து

கடந்த 2015-ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.  அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.

நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வந்த ஊழல் தடுப்பு நீதிமன்றம் ஜூலை 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 

அதில் நவாஸ் ஷெரீஃபுக்கு 11 ஆண்டுகளும் 8 மில்லியன் பௌன்டு அபராதமும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 8 ஆண்டுகளும் சிறைத் தண்டனை, 2 மில்லியன் பௌன்டு அபராதமும் விதித்தது. நவாஸின் மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பபட்டது. அதையடுத்து, அந்த மூவரும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இவ்வழக்கு மீதான மேல்முறையீட்டு மனு அதர் மினல்லா மற்றும் மியன்குல் ஔரங்கசீப் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகளின் அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அதில், நவாஸ் மற்றும் அவரது மகள் மரியம், மருமகன் முகமது ஆகியோர் மீதான சிறைத் தண்டனை ரத்து செய்யப்பட்டது. மேலும் 0.5 மில்லியன் பிணையில் இவர்களை விடுவிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com