
மசூத் அஸாரை ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதை சீனா மீண்டும் தடுத்துள்ளது குறித்து அமெரிக்க மூத்த எம்.பி.யும், வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவருமான எலியட் எங்கெல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்லில் ஜெய்ஷ்-ஏ-முகமது தலைவர் மசூத் அஸார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவதற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.
இது மிகவும் அதிருப்தியளிக்கும் செயலாகும். பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாக சர்வதேச நாடுகளுக்கு அளித்துள்ள வாக்குறுதியை பாகிஸ்தானும், சீனாவும் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர், அதுகுறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியிருப்பதாகவும், அதற்கான அவகாசம் தேவைப்படுவதால் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் தீர்மானத்தை எதிர்த்ததாகவும் சீனா விளக்கமளித்துள்ளது.