காஸா எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள 100 ஹமாஸ் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பாலஸ்தீன எல்லைக்குள்பட்ட காஸா பகுதியிலிருந்து ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அதற்கு பதிலடி தரும் விதமாக காஸா பகுதியில் உள்ள 100 ஹமாஸ் பயங்கரவாத நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த தாக்குதலின்போது இஸ்ரேலின் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.
மேற்கு கரையோரப் பகுதியில் உள்ள அலுவலக வளாகத்தை ஆக்கிரமித்து பயங்கரவாத செயல்களுக்கு பயன்படுத்தி வந்த இடமும் இஸ்ரேலின் தாக்குதலுக்கு இலக்கானது.
மேலும், காஸாவில் பூமிக்கடியில் ரகசியமாக செயல்பட்டு வந்த ராக்கெட் தயாரிப்பு ஆலையும் தாக்கி அழிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஸா பகுதியில் உள்ள ரஃபா என்ற இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அப்பகுதியிலிருந்த வீடு சேதமடைந்ததில் இருவர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதில் தாக்குதலாக, காஸா பகுதியிலிருந்து வீசப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளை பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.