
இணையதளம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதில் உலக நாடுகளின் அரசுகள் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று முகநூல் (ஃபேஸ்புக்) நிறுவனத் தலைவருமான மார்க் ஸக்கர்பர்க் வலியுறுத்தியுள்ளார்.
இணையதளத்தில் அரசுகளின் தலையீடு இருக்கக் கூடாது என்று ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள நிறுவனங்கள் கூறி வந்தன.
எனினும், அண்மைக் காலமாக பயன்பாட்டாளர்களின் ரகசிய விவரங்களை இணையதளம் மூலம் ஊடுருவி திருடுதல், தவறான தகவல்களைப் பரப்புதல் போன்ற பல்வேறு காரணங்களால் அத்தகைய வலைதளங்கள் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றன.
அதிலும், மிகவும் பிரபலமான முகநூல் வலைதளத்தின் மூலம் இனவெறியை ஊட்டும் தகவல்கள் பரப்பப்படுவது, பிற நாடுகளின் தேர்தலில் தலையிடுவது உள்ளிட்ட செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
அண்மையில், நியூஸிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச் சூடு நடத்தி 50 பேரை படுகொலை செய்த இனவெறியர், அந்தக் காட்சிகளை முகநூல் வலைதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சூழலில், "தி வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் மார்க் ஸக்கர்பர்க் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:
இணையதளங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் உலக நாடுகளின் அரசுகளுக்கு மிக முக்கியப் பங்குள்ளது.
இணையதளம் தொடர்பான விதிமுறைகளை தொடர்ந்து புதுப்பித்து வருவதன் மூலம் இணையதளக் குற்றங்களை அரசுகள் தவிர்க்க முடியும். ஆபத்தான பதிவுகள், தேர்தல்களில் தலையீடுகள் ஆகியவற்றைத் தடுப்பது, தனி நபர் ரகசியங்கள், தகவல்கள் பாதுகாக்கப்படுவது ஆகியவற்றில் அரசின் கூடுதல் கண்காணிப்பும், கட்டுப்பாடும் தேவைப்படுகிறது.
இணையதளம் மூலம் சமுதாயத்துக்கு ஏற்படும் தீங்குகளைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், பொதுமக்களும், தொழில்முனைவோரும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வெளியிடுவதற்கான அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று தனது கட்டுரையில் ஸக்கர்பர்க் குறிப்பிட்டுள்ளார்.