
பாலாகோட்டில் இந்திய விமானப்படை விமானங்கள் கடந்த 43 நாள்களுக்கு முன்பு தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் இருக்கும் இடத்துக்கு சர்வதேச செய்தியாளர்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அழைத்து சென்றது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாலாகோட்டில் இருக்கும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் 300 முதல் 400 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியா தெரிவித்து வருகிறது. எனினும், இதை பாகிஸ்தான் ஆரம்பம் முதலே மறுத்து வருகிறது.
இந்நிலையில், பாலாகோட்டுக்கு சர்வதேச செய்தியாளர்கள், வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் ஆகியோரை பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை அழைத்து சென்றுள்ளது. இந்தத் தகவல் பிரபல பிபிசி உருது தொலைக்காட்சியின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இஸ்லாமாபாதில் இருந்து பாலாகோட்டில் உள்ள ஜப்பா பகுதிக்கு சர்வதேச செய்தியாளர்கள், வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகள் ஆகியோரை ஹெலிகாப்டரில் பாகிஸ்தான் ராணுவம் அழைத்து சென்றது. பின்னர் அங்கிருந்து ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாம் இருக்கும் மலைப்பகுதிக்கு அவர்கள் கால்நடையாக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பின்னர் இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுவீசியதால் நேரிட்ட பள்ளத்தை அவர்கள் பார்வையிட்டுள்ளனர். இக்குழுவினர் பாலாகோட் சென்றபோது அங்குள்ள மதரசாவில் 12 முதல் 13 வயதுடைய சுமார் 150 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு குரான் கற்பித்து கொடுக்கப்பட்டுள்ளது. பாலாகோட்டில் அவர்கள் சுமார் 20 நிமிடங்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு அந்த இடத்தில் புகைப்படங்கள் எடுக்கவும், பாலாகோட் மதரசாவில் இருக்கும் ஆசிரியர்களுடன் பேசவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுபோல் பாலாகோட்டுக்கு சர்வதேச செய்தியாளர்களையும், வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகளையும் பாகிஸ்தான் அழைத்துச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
பாலாகோட் தாக்குதலில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்ற தனது வாதத்தை நிரூபிக்கவே, சர்வதேச செய்தியாளர்களையும், வெளிநாடுகளின் தூதரக அதிகாரிகளையும் பாகிஸ்தான் அழைத்துச் சென்றுள்ளது என்று பிபிசி உருது தொலைக்காட்சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.