
பாகிஸ்தானில் 2 ஹிந்து சிறுமிகள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை என்று அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில், ஹோலி பண்டிகையின்போது 13 மற்றும் 15 வயதுடைய இரு ஹிந்து பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாகவும், அவர்களுக்கு முஸ்லிம் ஆண்களோடு திருமணம் செய்துவைக்கப்பட்டதாகவும் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தின.
இந்தச் சூழலில், ரவீணா (13), ரீனா (15) ஆகிய அந்த இரு பெண்களும், இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி தாக்கல் செய்துள்ள மனுவில், தாங்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை எனவும், இஸ்லாம் மதத்தை விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
அந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த 5 நபர் கொண்ட குழுவை அமைத்தது. அந்தக் குழு தாக்கல் செய்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ரவீணா, ரீனா ஆகிய இருவரும் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படவில்லை என்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், அவர்கள் இருவரும் தங்கள் கணவர்களுடன் வசிப்பதற்கு அனுமதி அளித்தது .