4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார்...வடகொரியாவுக்கு தென்கொரிய அதிபர் அழைப்பு

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் நின்றுபோயுள்ள அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உதவிடும் வகையில் 4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார் என
4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார்...வடகொரியாவுக்கு தென்கொரிய அதிபர் அழைப்பு

வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையில் நின்றுபோயுள்ள அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு உதவிடும் வகையில் 4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார் என தென் கொரிய அதிபர் மூன்ஜே -இன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன்னுக்கு திங்கள்கிழமை அழைப்பு விடுத்தார்.
 இதுகுறித்து அவர் மூத்த அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையின்போது தெரிவித்துள்ளதாவது:
 வடகொரியா தயாராக இருப்பின், தென்கொரியாவும் அதனுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்க தயாராக உள்ளது. இதையடுத்து, 4-ஆவது உச்சி மாநாட்டில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் -உன்னை சந்திக்க நான் தயாராக உள்ளேன்.
 அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையில் நடைபெற்ற இரண்டு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காட்டிலும், இந்த முறை இரு நாடுகளின் உறவில் முன்னேற்றத்தை அடையும் வகையிலும், உறுதியான மற்றும் நடைமுறைக்கு ஒத்துவரும் விவாதங்களை 4-ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொள்வதற்கு தென்கொரியா தனது முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்றார் அவர்.
 வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் தேக்க நிலை நீடித்து வரும் சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் கடந்த வாரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 குறிப்பாக, வியத்நாம் தலைநகர் ஹனோயில் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையிலான 2-ஆவது பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த பிறகு, தென் கொரிய அதிபருடன் டிரம்ப் நடத்திய முதல் ஆலோசனை இதுவாகும்.
 இந்தச் சூழ்நிலையில், 4-ஆவது உச்சி மாநாட்டுக்கு தயார் என தென்கொரிய அதிபர் வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்திருப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
 இதுவரை தென் கொரிய அதிபர் மூன் ஜேன்-இன் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் ஆகியோர் 3 முறை சந்தித்துப் பேசினர்.
 முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் இடையே யான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கும், வட கொரியா மீதான தடைகளை அமெரிக்கா விலக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இருவரும் ஒப்புக் கொண்டனர்.
 இருப்பினும், வட கொரியா அணு ஆயுதங்களைக் கைவிடுவதற்கான வரையறைகள் குறித்து அந்த உடன்பாட்டில் எதுவும் குறிப்பிடப்படாததால், அது பெயரளவிலான கூட்டறிக்கையாக மட்டுமே இருப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
 இந்த நிலையில், டிரம்ப், கிம் ஆகியோருக்கு இடையிலான இரண்டாவது சந்திப்பு வியத்நாமின் ஹனோய் நகரில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com