ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: சூடானில் தொடரும் போராட்டங்கள்

சூடானில் மீண்டும் மக்களாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ராணுவ ஆட்சியாளர்களிடம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: சூடானில் தொடரும் போராட்டங்கள்

சூடானில் மீண்டும் மக்களாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ராணுவ ஆட்சியாளர்களிடம் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 சூடான் அதிபராக நீண்டகாலம் பதவி வகித்து வந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக, இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் சர்வதேச நீதிமன்றம் 2 கைது வாரண்டுகளை பிறப்பித்ததையடுத்து அவருக்கு எதிராக அந்நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது.
 அதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்துவிட்டு, ஆட்சி பொறுப்பை ராணுவ கவுன்சில் ஏற்றது. இதைத் தொடர்ந்து, சூடான் அதிபராக ராணுவ தலைமை தளபதி ஜெனரல் அவத் இபின் அல்ப் வியாழக்கிழமை பதவியேற்றார்.
 ஆனால் ராணுவ தளபதி, அதிபராக பொறுப்பேற்றதை மக்கள் விரும்பாததால், அவருக்கு எதிராக சூடான் புரபஷனல்ஸ் கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து அவத் இபின் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 புதிய அதிபராக, ஜெனரல் அப்தல் பட்டா அல் -பர்கான் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன், சூடானில் இரவோடு இரவாக, ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும், போராட்டக்காரர்களைக் கொன்றவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 இந்நிலையில், சூடானில் மீண்டும் மக்களாட்சியை ராணுவ ஆட்சியாளர்கள் ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ கவுன்சிலில் மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 முன்னதாக, சூடானில் உள்ள அரசியல் கட்சிகளைச் சந்தித்து ராணுவ ஆட்சிக்கு ஒத்துழைக்குமாறு ராணுவத்தினர் வலியுறுத்தினர். சுதந்திரமான, ஜனநாயக நாடாக சூடானை மாற்ற ராணுவக் கவுன்சிலுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச நாடுகளுக்கு சூடான் வெளியுறவு துறை அமைச்சகமும் கோரிக்கை விடுத்தது.
 ஆனால் சூடானில் மக்களாட்சி ஏற்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகளும், ராணுவக் கவுன்சிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியது அவசியம் இந்நேரத்தில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்கா, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட நாடுகள் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com