அரசியல் சூழலால் பாதிக்கப்படும் அகதிகள்!: போப் பிரான்சிஸ் கவலை
By DIN | Published on : 20th April 2019 11:59 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

உலக நாடுகளில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக, தங்கள் நாட்டை விட்டு மற்ற நாடுகளுக்கு இடம்பெயரும் அகதிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக போப் பிரான்சிஸ் கவலை தெரிவித்துள்ளார்.
"புனித வெள்ளி'யையொட்டி, வாடிகனில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களும், ரோமானிய மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கலந்துகொண்டனர். அப்போது, போப் பிரான்சிஸ் பேசியதாவது:
உலகில் பசியால் வாடுபவர்களையும், அன்புக்காக ஏங்குபவர்களையும், உறவினர்களால் கைவிடப்பட்டவர்களையும் கடவுள் காப்பாற்றுவார். பல்வேறு நாடுகளில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழல் காரணமாக, மற்ற நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களின் நிலைமை மோசமாக உள்ளது. மக்களின் மனம் கல்லானதாலும், பயத்தின் காரணமாகவும் அகதிகளுக்கான கதவுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கத்தோலிக்க திருச்சபைகளில் பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசிய போப் பிரான்சிஸ், ""தூய்மைத்தன்மை நிறைந்த குற்றமற்ற குழந்தைகள், தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்'' என்றார்.
இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மற்ற நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்கு வருகை தரும் அகதிகளுக்கு இடமளிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.