ரஷியத் தலையீடு விசாரணை: முல்லரை நீக்க விரும்பினார் டிரம்ப்: அறிக்கையில் தகவல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த விசாரணையை சிறப்பு விசாரணை அதிகாரி தீவிரப்படுத்தினால், அவரை பதவியிலிருந்து நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பியதாக, இதுகுறித்த விசாரணை
ரஷியத் தலையீடு விசாரணை: முல்லரை நீக்க விரும்பினார் டிரம்ப்: அறிக்கையில் தகவல்


அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த விசாரணையை சிறப்பு விசாரணை அதிகாரி தீவிரப்படுத்தினால், அவரை பதவியிலிருந்து நீக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பியதாக, இதுகுறித்த விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவைத் திரட்டும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் அலுவலகக் கணினிகளில் ரஷியா ஊடுருவியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும், டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரகசியக் கூட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து விசாரணை நடத்த, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (எஃப்.பி.ஐ.) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் சிறப்பு விசாரணை அதிகாரியாக கடந்த 2017-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையின் அறிக்கையை அவர் நீதித் துறையிடம் அண்மையில் தாக்கல் செய்திருந்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வந்த அந்த அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு இருந்தது உண்மைதான் என்றாலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும், டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரகசியக் கூட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று  குறிப்பிடப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் வில்லியம் பர் தெரிவித்தார்.
400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சிறப்பு விசாரணை அதிகாரியாக ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்த விசாரணையை அவர் தீவிரப்படுத்தினால் அது தனது ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று டிரம்ப் கருதினார்.
எனவே, முல்லர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை சட்ட ஆலோசகர் டொனால்ட் மெக்கனிடம் டிரம்ப் தெரிவித்தார்.
எனினும், அதனை டொனால்ட் மெக்கன் செயல்படுத்தவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷியா மறுப்பு: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு இருந்ததாக முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை ரஷியா மறுத்துள்ளது.
இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்ததாகக் கூறப்படுவது குறித்து, முல்லரின் அறிக்கையில் போதிய ஆதாரங்கள் தரப்படவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com