அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனநாயகக் கட்சி எம்.பி. எலிசபெத் வாரன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்தது உண்மைதான் என்று இதுகுறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க
அதிபர் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: ஜனநாயகக் கட்சி எம்.பி. எலிசபெத் வாரன்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு செய்தது உண்மைதான் என்று இதுகுறித்த விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதால், அதிபர் டொனால்ட் டிரம்ப்பை தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று  எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி. எலிசபெத் வாரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கடந்த 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை வெற்றி பெறச் செய்வதற்காக, ரஷியா ஊடுருவல் செய்ததாக ராபர்ட் முல்லர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான நாடான ரஷியாவின் அந்தத் தலையீட்டை அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் ஏற்றுள்ளார்.
எனவே, அதிபருக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கைகளை நாடாளுமன்றம் தொடங்க வேண்டியது அவசியமாகியுள்ளது என்றார் அவர்.
மாஸசூஸட்ஸ் மாகாண செனட் சபை  உறுப்பினரான எலிசபெத் வாரன், அடுத்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவைத் திரட்டும் வகையில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் மற்றும் அலுவலகக் கணினிகளில் ரஷியா ஊடுருவியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
மேலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும், டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரகசியக் கூட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்த, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பின் (எஃப்.பி.ஐ.) முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் சிறப்பு விசாரணை அதிகாரியாக கடந்த 2017-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
அதையடுத்து, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையின் அறிக்கையை அவர் நீதித் துறையிடம் அண்மையில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு இருந்தது உண்மைதான் என்றாலும், இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கும், டிரம்ப் பிரசாரக் குழுவுக்கும் ரகசியக் கூட்டு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்று  குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், ஜனநாயகக் கட்சி எம்.பி. எலிசபெத் வாரன் இவ்வாறு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com