அபுதாபியில் முதல் ஹிந்து கோயிலுக்கு அடிக்கல்: ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் முதல் ஹிந்து கோயில் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் முதல் ஹிந்து கோயில் கட்டுவதற்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 33 லட்சம் இந்தியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் வழிபடுவதற்காக அந்நாட்டில்  ஹிந்து கோயில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டு அபுதாபிக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அங்கு ஹிந்து கோயில் அமைப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதையடுத்து, இப்போது அபுதாயில் ஹிந்து கோயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப் சூரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்துரையை அனைவர் முன்பாகவும் நவ்தீப் வாசித்தார்.
அதில், " 130 கோடி இந்தியர்களின் சார்பாக, அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சையது அல் நயனுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோயிலின் கட்டுமானப் பணி நிறைவுறும்போது, அது இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை பிரதிபலிக்கும் சின்னமாக இருக்கும். அங்கு வாழும் இந்தியர்களுக்கு அமீரக அரசு அளித்துள்ள மரியாதையை உலக நாடுகளுக்கு தெரிவிப்பதாக இருக்கும்' என்று மோடி குறிப்பிட்டிருந்தார்.
இந்த கோயில் 7 அடுக்குகளாக கட்டப்படவுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் இருக்கும் 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் இவ்வாறு அமைக்கப்படவுள்ளது. கோயில் வளாகத்தினுள் அருங்காட்சியகம், நூலகம் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன. சிறந்த சுற்றுலாத் தளமாக இருக்கும் வகையில் கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com