ஆப்கன்: அமைச்சகம் முன் தற்கொலைத் தாக்குதல்: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் முன் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தானில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் முன் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அரசின் பல்வேறு அமைச்சகங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இந்த வளாகத்துக்குள் சனிக்கிழமை நுழைந்த தற்கொலைப் படையினர், இங்குள்ள அமைச்சகங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னேறிச் சென்றனர். அப்போது, தற்கொலைப் படையினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அந்த நேரத்தில், தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர், தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் முன்பு தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து, தனது படையினர் முன்னேறிச் செல்வதற்கு உதவினார். இந்த குண்டு வெடிப்பில், பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்தனர். 3 பெண்கள் உள்பட 6 காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளும், ஐ.எஸ். பயங்கரவாதிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
 எனினும், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இவ்விரு அமைப்புகளும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையே கத்தார் தலைநகர் தோஹாவில் வெள்ளிக்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது.
 ஆனால், கடைசி நேரத்தில் இந்த பேச்சுவார்த்தைக்கு தலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்து விட்டது. இந்தச் சூழலில் காபூலில் தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்ட அவைரும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர் என்று ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com