இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு

இலங்கையில் இன்று மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து தொடர் குண்டு வெடிப்பு நடந்தது.
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 207 ஆக உயர்வு


கொழும்பு: இலங்கையில் இன்று மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புகளில் 207 போ் உடல் சிதறி உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டங்களை சீா்குலைக்கும் விதமாக இத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இலங்கைத் தலைநகர் கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், மேற்குப் பகுதியில் கடலோர நகரமான நீா்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டகளப்பு நகரில் உள்ள புனித மிக்கேல் தேவாலயம் ஆகியவற்றில் இன்று காலை 8.45 மணியளவில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில்,  ஈஸ்டர் பண்டிகைக்கான சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டிருந்த மக்கள் குண்டுவெடிப்பில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனா்.

கொழும்பில் 50-க்கு மேற்பட்டோரும், நீா்கொழும்பில் 100-க்கு மேற்பட்டோரும், மட்டகளப்பில் 30-க்கு மேற்பட்டோரும் பலியானதாக மருத்துவமனைகள் வட்டாரம் வெளியிட்ட முதல்கட்டத் தகவல்களில் தெரியவந்தது.

தாக்குதலில் தொடா்புடையவர்களை தேடிச் சென்ற இலங்கை காவல்துறையினா் கொழும்பில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்த முயன்றபோது, அதை முறியடிக்கும் வகையில் பயங்கரவாதி ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று காவலா்கள் உயிரிழந்தனர். இதுவரையில் 8 பேரை காவல்துறையின கைது செய்துள்ளனர். 

இதைத்தொடா்ந்து, நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

8 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 இடங்களில் நிகழ்ந்தது தற்கொலைத் தாக்குதல் என தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, சீனா, வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 35 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுவரை 207 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் கொழும்பு, மட்டகளப்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. 

நாட்டில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நடந்ததைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாடெங்கிலும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com