பழைய நட்பை புதுப்பிக்க வட கொரிய அதிபர் ரஷிய பயணம்

ரஷியாவுடனான பழைய நட்பை புதுப்பிப்பதில் வட கொரியா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்  -உன் தலைமையிலான குழு இந்த வாரம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் விமான சாகசப் பயிற்சியைப் பார்வையிட்ட அதிபர் கிங் ஜோங்-உன் (கோப்புப் படம்).
போர் விமான சாகசப் பயிற்சியைப் பார்வையிட்ட அதிபர் கிங் ஜோங்-உன் (கோப்புப் படம்).


ரஷியாவுடனான பழைய நட்பை புதுப்பிப்பதில் வட கொரியா தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, வட கொரிய அதிபர் கிம் ஜோங்  -உன் தலைமையிலான குழு இந்த வாரம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பாக வடகொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையில் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த விவகாரத்தில் இதுவரையில் உறுதியான உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
 முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ள அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சுவார்த்தைக்கு புத்துயிரூட்டவும், சீனாவுக்கு எதிர்சமநிலையை ஏற்படுத்த வேண்டிய தேவையும் கிம் ஜோங் -உன்னுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டக்  நகருக்கு செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் அங்கு ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற இருக்கிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரிய அதிபராக இருந்த  கிம் ஜோங் இல், அப்போது ரஷிய அதிபராக இருந்த திமித்ரி மெட்வதேவ் ஆகியோர் முதன் முதலாக  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதன் பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. தற்போதைய நிலையில், கிம் ஜோங் -உன், ரஷிய அதிபரை சந்திக்க மிக ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக கிம் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் ஹன்னோயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய இரண்டு மாதங்களுக்குள் கிம் ரஷிய அதிபரை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வடகொரியா-அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையிலிருந்து அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பேயோ நீக்கப்பட வேண்டும் என வட கொரியா வலியுறுத்தியுள்ளது.
 ஓராண்டு கால இடைவெளிக்குள் கிம் ஜோங் -உன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நான்கு முறை சந்தித்துப் பேசியுள்ளார். வடகொரியா தனது நிலைப்பாட்டுக்கு சர்வதேச ஆதரவை பெறும் வகையிலேயே இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com