பொருளாதாரத் தடையால் சாப்ஹார் துறைமுக திட்டம் பாதிக்கப்படாது: அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டு வரும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
பொருளாதாரத் தடையால் சாப்ஹார் துறைமுக திட்டம் பாதிக்கப்படாது: அமெரிக்கா

ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டு வரும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் தடையால் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாப்ஹார் துறைமுகத் திட்டம் பாதிக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ள ஈரானுடன் அனைத்து நாடுகளும் வர்த்தக உறவுகளைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார். எனினும், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் வேண்டுகோளை ஏற்று அந்நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று கடந்த 6 மாதங்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இனி அந்த விலக்கு தொடராது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது.
அதே நேரத்தில் இந்திய உதவியுடன் ஈரானில் செயல்படுத்தப்படும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டத்துக்கு பொருளாதாரத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்தத் துறைமுக மேம்பாடு மூலம் ஆப்கானிஸ்தானும் பொருளாதாரரீதியாகப் பயனடையும். போரினால் சிதைந்து போயுள்ள ஆப்கானிஸ்தானின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.
கடந்த 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடி, ஈரான் அதிபர் ஹசன் ரெüஹானி, ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கனி ஆகியோர் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்ஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். மேலும், இந்தியா இனி பாகிஸ்தானை அணுகாமல் ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
சாப்ஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய நிதியுதவியுடன் மேற்கொள்வதற்கான முடிவு, கடந்த 2003-ஆம் ஆண்டே எடுக்கப்பட்டது. எனினும், ஈரான் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதித்திருந்த பொருளாதாரத் தடைகளின் காரணமாக அத்திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை, கடந்த 2016 ஜனவரி மாதம் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா அகற்றினார். இதையடுத்து, சாப்ஹார் துறைமுகத் திட்டத்தை நிறைவேற்ற இந்தியா-ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com