இலங்கை: கத்தோலிக்க தேவாலயங்களில் பொது வழிபாடு நிறுத்தம்

இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, நாட்டில் பாதுகாப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை கத்தோலிக்க தேவாலயங்களில் பொது வழிபாடு ரத்து செய்யப்படுவதாக

இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, நாட்டில் பாதுகாப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை கத்தோலிக்க தேவாலயங்களில் பொது வழிபாடு ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க சபை அறிவித்துள்ளது.
இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பில் சுமார் 360 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தியர்கள் 11 பேர் உள்பட வெளிநாட்டவர்கள் 35 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாட்டில் நிலைமை சீராகும் வரை, கத்தோலிக்க தேவாலயங்களில் பொது வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொழும்பு கத்தோலிக்க தேவாலய பேராயர் மால்கம் ரஞ்ஜித் கூறியதாவது:
இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தின்போது, தேவாலயங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சர்வதேச நாடுகளுடன் தொடர்பில் உள்ள பயங்கரவாத அமைப்புதான் இந்த தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கும். தற்கொலைத் தாக்குதல் செய்தவர்களுக்கு எந்த மதமும் இல்லை.
நாட்டில், பாதுகாப்பு நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, பொது வழிபாடு நடத்த வேண்டாம் என்று அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடுத்த அறிவிப்பு வரும் வரை பொது வழிபாடு ரத்து செய்யப்படுகிறது என்று கூறினார்.
மேலும், அதிபர் மைத்ரிபால சிறீசேனாவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தங்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை புறம் தள்ளிவிட்டு, தேச பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அது குறித்து அதிபருக்கும், பிரதமருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. அவர்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளே இத்தகைய பிரச்னைக்கு காரணம் என்று இலங்கை ஊடகங்களும், அமைச்சர்களும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com