செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: முதல் முறையாக கண்டறிந்தது நாசா ஆய்வுக் கலம்

செவ்வாய் கிரகத்தில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டதை, அங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க ஆய்வுக் கலமான "இன்சைட்' முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு: முதல் முறையாக கண்டறிந்தது நாசா ஆய்வுக் கலம்

செவ்வாய் கிரகத்தில் மிதமான நில அதிர்வு ஏற்பட்டதை, அங்கு ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்க ஆய்வுக் கலமான "இன்சைட்' முதல் முறையாகக் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு  மையம் (நாசா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் இன்சைட் கலத்தில் பொருத்தப்பட்டுள்ள நில அதிர்வுமானி, அங்கு ஏற்பட்ட நில அதிர்வை கண்டறிந்துள்ளது.
அந்த ஆய்வுக் கலம் தரையிறங்கிய 128-ஆவது செவ்வாய் கிரக நாளில், அதாவது இந்த மாதம் 6-ஆம் தேதி அந்த அதிர்வு ஏற்பட்டது.
செவ்வாய் கிரகத்தின் நிலத்தடி இயக்கத்தால் ஏற்பட்ட அதிர்வை இன்சைட் நில அதிர்வுமானி பதிவு செய்துள்ளது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை அந்த கிரகத்தின் மேல் பகுதியிலுள்ள வளி மண்டல இயக்கத்தின் காரணமாக ஏற்பட்ட அதிர்வுகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட அந்த நில அதிர்வு, எதனால் உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து இன்சைட் ஆய்வு திட்டத்தின் முதன்மை ஆய்வாளர் புரூஸ் பானெர்ட் கூறியதாவது:
செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் அதிர்வுகளை ஏற்கெனவே நாங்கள் பதிவு செய்துள்ளோம்.
ஆனால், இந்த முறைதான் நிலத்தடியில் உருவான அதிர்வை முதல் முறையாக பதிவு செய்துள்ளோம். இதன் மூலம், செவ்வாய் கிரக நில அதிர்வு குறித்த புதிய ஆய்வு தொடங்கியுள்ளது என்றார் அவர்.
பெருங்கடல்களாலும், வானிலை மாற்றங்கள் காரணமாகவும் எப்போதும் அதிர்வொலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பூமியைப் போலன்றி, செவ்வாய் கிரகம் மிக அமைதியாகக் காணப்படுகிறது.
எனவே, அந்த கிரகத்தில் சிறு அதிர்வைக் கூட இன்சைட் ஆய்வுக் கலத்தின் நில அதிர்வுமானியால் உணர முடியும்.
அந்த வகையில், தற்போது பதிவு செய்யப்பட்ட அதிர்வு மிகக் குறைந்த சக்தி கொண்டதாக இருந்தாலும், அந்த அதிர்வு நீடித்த காலமும், அதன் தீவிரமும் நிலவில் ஏற்பட்ட நில அதிர்வுக்கு ஒப்பானதாக இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 4 நில அதிர்வுமானிகளைப் பொருத்தி, கடந்த 1969-ஆம் ஆண்டு முதல் 1977-ஆம் ஆண்டு வரை பல்வேறு நில அதிர்வுகளைப் பதிவு செய்து வந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாக, வரும் 2024-ஆம் ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி வைக்க நாசா திட்டமிட்டுள்ளது.
இந்தச் சூழலில், செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com