ரஷியா:  புதின், கிம் ஜோங்-உன்: முதல் முறையாக சந்திப்பு

ரஷியா:  புதின், கிம் ஜோங்-உன்: முதல் முறையாக சந்திப்பு

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை முதல் முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினை வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை முதல் முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இருநாட்டு நட்புறவை மேம்படுத்த இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
தனது அணு ஆயுதங்களைக் கைவிட தயாராக இருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்த பிறகு, சீன அதிபர் ஷி ஜின்பிங்கை 4 முறையும், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன்னை 3 முறையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை 2 முறையும் அவர் சந்தித்துப் பேசினார்.
இந்தச் சூழலில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, விளாதிவோஸ்டாக் நகருக்கு பிரத்யேக ரயில் மூலம் கிம் ஜோங்-உன் புதன்கிழமை வந்தார்.
இந்த நிலையில், புதினுக்கும், கிம் ஜோங்-உன்னுக்கும் இடையிலான முதல் சந்திப்பு அந்த நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்த இருவரும், வட கொரியாவை நிறுவிய கிம் ஜோங்-உன்னின் தாத்தா கிம் இல்-சங்குக்கு சோவியத் யூனியன் உதவியளித்த காலத்தில் இருந்ததைப் போன்ற நட்புறவை மீண்டும் வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் ரஷியாவுடனான புதிய நட்புறவு அதிக ஸ்திரத்தன்மையையும், வலிமையையும் அடையும் என்று கிம் ஜோங்-உன் நம்பிக்கை தெரிவித்தார்.
வட கொரிய அதிபரின் வருகையால் அந்த நாட்டுடனான ராஜீய மற்றும் வர்த்தக உறவு மேன்மையடையும் என்று விளாதிமீர் புதினும் நம்பிக்கை தெரிவித்தார்.
இரு தலைவர்களும் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதனைத் தொடர்ந்து பேசிய கிம் ஜோங்-உன், புதினுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
பேச்சுவார்த்தையின்போது பல்வேறு விவகாரங்கள் விரிவாக அலசி ஆராயப்பட்டதாக புதின் தெரிவித்தார்.
எனினும், பேச்சுவார்த்தையின் முழு விவரத்தை இருவருமே வெளியிடவில்லை.
வியத்நாம் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபருடன் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்குப் பிறகு, உலகத் தலைவர் ஒருவரை கிம் ஜோங்-உன் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விவகாரத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்க விரும்பும் விளாதிமீர் புதின், இந்தச் சந்திப்பின் மூலம் அமெரிக்காவுடன் மோதுவதற்கான இன்னொரு களத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com