
பாகிஸ்தானில் கர்தார்பூர் வழித்தட திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த "எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
கர்தார்பூர் வழித்தடத் திட்டப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து விட்டன. இதில் ஜீரோ பாயிண்ட் பகுதியிலிருந்து குருத்வாரா வரையிலான பகுதியில் முக்கிய சாலை , பாலம், கட்டடங்கள் அமைத்தல் ஆகிய பணிகளும் அடங்கும்.
இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தரப்பில் அந்தத் திட்டத்தை பயன்பாட்டுக்கு சீக்கிய மத நிறுவனர் குரு நானக் நினைவு தினத்தில் வரும் நவம்பர் மாதம் பிரதமர் இம்ரான் கான், தலைமை தளபதி ஆகியோர் தொடங்கி வைப்பார்கள் எனத் தெரிகிறது. இதன்பின்னர் இந்தியாவில் இருந்து முதல் யாத்ரீகர்கள் குழு, நவம்பர் மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தான் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் குழுவில் இருக்கும் யாத்ரீகர்கள் எண்ணிக்கை குறித்து சரியாகத் தெரியவில்லை என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக், பாகிஸ்தானில் தற்போது உள்ள கர்தார்பூரில் தமது இறுதிக்காலத்தில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு அவரால் ஏற்படுத்தப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் புனிதப் பயணம் செல்வதை மதக் கடமையாக கருதுகின்றனர்.
எனவே, கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் இரு நாடுகளாலும் கர்தார்பூர் வழித்தடத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின்படி, தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து எல்லைப் பகுதி வரை இந்தியாவும், எல்லைப் பகுதியில் இருந்து தர்பார் சாஹிப் குருத்வாரா வரை பாகிஸ்தானும் சாலை அமைத்தல், பாலங்கள் அமைத்தல், கட்டடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உத்தேசித்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித் தடம் வழியாக இந்தியாவில் இருந்து சீக்கியர்கள், தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு விசா இல்லாமல் சென்று திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.