காஷ்மீரில் இந்தியாவின் அத்துமீறலை கடுமையாக எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் பிடிவாதம்

இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 
காஷ்மீரில் இந்தியாவின் அத்துமீறலை கடுமையாக எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் பிடிவாதம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகளை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பாணை குடியரசுத் தலைவர் கையெழுத்துடன் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இதனை அறிவித்தார். இதற்கு காங்கிரஸ், பிடிபி, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அறிவிப்பு எனவும் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி கூறுகையில்,

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவை திரும்பப் பெறும் இந்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது பாகிஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்திய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் உறுதுணையாக இருக்கும். 

ஒரு சர்வதேசப் பிரச்னையில் இந்திய அரசின் இந்த அத்துமீறலை அனைத்து விதத்திலும் எதிர்கொள்ள பாகிஸ்தான் தயாராக உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் போலி ஜனநாயக முகத்திரை இன்று இவ்வுலகுக்கு தெரியவந்துள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கை காஷ்மீர் விவகாரத்தை பெரிதுபடுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com