ஹாங்காங்கில் தடையை மீறி தொடர் போராட்டம்: இன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

ஹாங்காங்கில் தடையை மீறி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஹாங்காங்கில் தடையை மீறி தொடர் போராட்டம்: இன்று வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

ஹாங்காங்கில் தடையை மீறி இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
 அந்த நகரில் அதிகாரிகள் விதித்திருந்த கட்டுப்பாடுகளை மீறி சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போலீஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டங்கள் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
 இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
 ஹாங்காங்கில் சீன ஆதரவு அரசை எதிர்த்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
 அரசால் தடை செய்யப்பட்ட பகுதிகளிலும் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்களின்போது, முந்தைய நாளைப் போலவே போராட்டக்காரர்களைக் கலைப்பதற்காக கலவரத் தடுப்பு போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
 ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தியும், சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட அந்த நகர அரசைக் கலைக்கக் கோரியும் ஜனநாயக ஆதரவாளர்கள் 3 நாள்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ள இந்த ஒத்துழையாமைப் போராட்டம், திங்கள்கிழமை (ஆக. 5) வரை தொடரும். 3-ஆவது நாளான திங்கள்கிழமை, ஹாங்காங் முழுவதும் வேலைநிறுத்தம் மேற்கொள்ள போராட்டக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
 இதன் காரணமாக, நகரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. திங்கள்கிழமை நடைபெறும் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது போலீஸாரின் மன உறுதியைக் குலைக்கும் வகையிலேயே சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தடைகளை மீறி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருவதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 போராட்டக்காரர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக ஹாங்காங் அரசுக்கு இந்த 3 நாள் தொடர் போராட்டம் புதிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 மேலும், ஹாங்காங்கில் தீவிரமான ஜனநாயகப் போராட்டத்தை அந்த நகர அரசு எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பதற்கான சோதனையாகவும் திங்கள்கிழமை நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப் போராட்டம் அமையும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com