கருக்கலைப்பை குற்றமற்றதாக்க நியூஸிலாந்தில் சட்டமசோதா

நியூஸிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதை குற்றமற்ற நடவடிக்கையாக்குவதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு


நியூஸிலாந்தில் பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்வதை குற்றமற்ற நடவடிக்கையாக்குவதற்கான சட்ட மசோதாவை அந்நாட்டு அரசு கொண்டுவருகிறது. 
கருக்கலைப்பை குற்ற நடவடிக்கையாக வரையறுக்கும் கடுமையான சட்டம் நியூஸிலாந்தில் தற்போது அமலில் உள்ளது. எனினும், ஒரு பெண் கருத்தரித்திருப்பது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவருக்கு அபாயத்தை ஏற்படுத்தும் என்று இரு மருத்துவர்கள் அறிக்கை அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பெண் கருக்கலைப்பு செய்துகொள்ள அந்தச் சட்டம் அனுமதிக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அந்நாட்டில் பலர் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர். 
இந்நிலையில், தற்போது கொண்டுவரப்படும் சட்ட மசோதா, கருக்கலைப்பு நடவடிக்கையை பெண்ணின் உடல்நலன் தொடர்புடைய ஒன்றாகவும், அதுவும் பெண்ணின் விருப்பத்துக்கு உள்பட்ட ஒன்றாகவும் வரையறுக்கிறது. மேலும், கர்ப்பம் தரித்துள்ள ஒரு பெண் 20 வாரங்கள் வரை வளர்ச்சி அடைந்த நிலையில் இருக்கும் கருவை கலைத்துக்கொள்ள அனுமதி அளிக்கிறது. 
அத்துடன், கருக்கலைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோரிடம் இருந்து, கருக்கலைப்பு செய்துகொள்ள விரும்பும் பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், மருத்துவமனையிலிருந்து 150 மீட்டர் சுற்றளவுள்ள பகுதியை பாதுகாக்கப்பட்ட ஒன்றாக அறிவிக்கவும் வகை செய்கிறது. 
நியூஸிலாந்து அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி, அந்நாட்டில் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 13,000 பேர் கருக்கலைப்பு செய்துள்ளனர். அவர்களில் 57 பேர் மட்டுமே 20 வாரங்கள் வளர்ந்த நிலையில் இருக்கும் கருவை கலைத்துக் கொண்டுள்ளனர். 
நியூஸிலாந்து நாடாளுமன்றத்தில் வரும் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட இருக்கும் இந்த மசோதா குறித்து அந்நாட்டு சட்டத்துறை அமைச்சர் ஆன்ட்ரூ லிட்டில் கூறுகையில், நியூஸிலாந்தில் தற்போது குற்றமாக கருதப்படும் ஒரே மருத்துவ நடைமுறையாக கருக்கலைப்பு மட்டுமே உள்ளது. அதை மாற்றுவதற்கான நேரம் இது. 
குற்றச் சட்டத்தில் இருந்து கருக்கலைப்பு நடைமுறையை நீக்க புதிய மசோதா வகைசெய்கிறது. இதனால், கருக்கலைப்பு தொடர்பான சட்டம் நவீனப்படுத்தப்பட்டு, வளர்ந்த நாடுகளின் சட்டங்களுக்கு இணையானதாக அது இருக்கும்.  பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வது சுகாதாரம் தொடர்பான விவகாரமாக கருத்தப்பட வேண்டும் என்றார். 
மத ரீதியாக கருக்கலைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.பி.க்கள், நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com